பா.ஜ.க. வசதியான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும்.. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை

கர்நாடகாவில் பா.ஜ.க. வசதியான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று அம்மாநில முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்து முடிந்தது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. சட்டப்பேரவை தேர்தல் முடிந்த சில மணி நேரங்களில் தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் வெளியாகின. பெரும்பான்மை கணிப்புகளில் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் அதேசமயம் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பேரவை அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் கர்நாடகாவில் பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும் என்று அம்மாநில முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறுகையில், உத்தர பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது தேர்தலுக்கு பிந்தைய எல்லா கருத்து கணிப்புகளும் யோகி ஆதித்யநாத் மீண்டும் வரமாட்டார் என்று கணித்தது. ஆனால் அவர் உத்தர பிரதேசத்தில் அவர் (யோகி ஆதித்யநாத்) வந்தார்.
கடந்த முறை பா.ஜக..வுக்கு 80 இடங்களும், காங்கிரஸூக்கு 107 இடங்களும் மட்டுமே கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் கணித்திருந்தன. ஆனால் அது தலைகீழாக மாறியது. எங்கள் கள அறிக்கைகள் மூலம் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், நாங்கள் வசதியான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (மே 13ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.