செய்தி சேனல்களுக்கான டிஆர்பி மீண்டும் வெளியிடப்படும் - பார்க் அறிவிப்பு..

 
BARC


செய்தி சேனல்களுக்கான டிஆர்பி விவரங்களை ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில்( BARC) மீண்டும் வெளியிட இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு   தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் டிஆர்பி  நடைமுறையில்  சில தொலைக்காட்சி நிறுவனங்கள் மோசடி  செய்து ஆதாயம் பெற்றதாக புகார் எழுந்தது. கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட வீட்டினருக்கு பணம் தந்து குறிப்பிட்ட  சேனலை  மட்டும் போட வைத்து மதிப்பீட்டுப் புள்ளிகளை உயர்த்தியதே முறைகேட்டின்  சாராம்சமாகும்.  மும்பை காவல்துறை விசாரித்து வந்த இந்த வழக்கில், ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமைச் செயல் அதிகாரி , தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டுப் பணிக்கு நிறுவனமான பார்க்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட   14க்கும் மேற்பட்டோர்  முறைகேட்டில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டனர்.  

barc

 இதனையடுத்து  பொழுதுபோக்கு மற்றும் செய்தி சேனல்களுக்கான டிஆர்பி விவரங்கள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளுக்கு மட்டும் டிஆர்பி வெளியிடப்பட்டது.  ஆனால் செய்தி சேனல்களின் டிஆர்பி விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது.  இந்தநிலையில் செய்திகளுக்கான பார்வையாளர்களை கணக்கிடும்  தரமதிப்பீடு அளவை ( TRP) மீண்டும்,  ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில்( BARC) தொடங்க உள்ளதாக  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

barc

மேலும்  டிஆர்பி அறிக்கை மற்றும் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரையின் படி  பார்க் (BARC) நிறுவனம்  தனது நிர்வாக கட்டமைப்புகளை மேம்படுத்தியுள்ளதாகவும்,  நிரந்தர மேற்பர்வை குழு அமைத்தல், தரவுகளை அணுகும் நெறிமுறைகளை கடுமையாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  இந்த புதிய நெறிமுறைகளை பின்பற்றி பார்வையாளர்களை கணக்கிடும்  தரமதிப்பீடு அளவை ( TRP) வெளியிடும் பணியை  பார்க் தொடங்க இருப்பதாக மத்திய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.  மேலும் டிஆர்பி சேவையை பயன்படுத்த பார்வையாளர்களின் தரவுகளை மேம்படுத்த வேண்டும்.  எனவே இதுகுறித்து பரிசீலிக்க பிரசார் பாரதி தலைமை செயல் அதிகாரி தலைமையில் செயற்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவக் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.