இம்ரான் கானுக்கு ஜாமீன்.. மற்றொரு வழக்கில் கைது செய்ய தீவிரம் - பாகிஸ்தானில் பதற்றம்

 
Imran khan

அறக்கட்டளை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ள நிலையில்,  மற்றொரு வழக்கில் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதால்  பதற்றம் நிலவுகிறது.

தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி  தலைவர் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அல் - காதர் அறக்கட்டளை மூலம் 5000  கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் மீது இருந்த குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த அவர்,  கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர்.  பதற்றம் அதிகரித்ததால் முக்கிய நகரங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனிடையே 8 நாள் காவலில் அடைக்கப்பட்ட இம்ரான் கானை  உடனே விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

​பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு - இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று அதிபர் அதிரடி நடவடிக்கை.. [Click and drag to move] ​

 இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் மதிப்பை கெடுக்கும் விதமாக 90 பேர் ஒரே நேரத்தில் நீதிமன்ற வளாகத்தில் நுழைந்ததாகவும், நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நபரை எப்படி கைது செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பினர். அத்துடன் இம்ரான் கான் கைது விவகாரத்தில் அவமதிப்பு நடந்துள்ளதாக கூறி,  ஒரு மணி நேரத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டனர்.  இதனை அடுத்து அவர்  பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில்,  இம்ரான் கானின் கைது சட்டவிரோதம் என்று அறிவித்த உச்சநீதிமன்றம் அவரை உடனே விடுதலை செய்யவும் உத்தரவிட்டது. அத்துடன்  உயர் நீதிமன்றத்தில் மே 12 ( நேற்று)  காலை ஆஜராகவும் நீதிபதிகள் அறிவுறுத்தியது.  

இம்ரான் கான்

இதனை அடுத்து காலை 10 மணிக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகிய அவருக்கு ஜாமீன் வழங்க பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  இருந்தபோதிலும் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீடித்த விசாரணையின் முடிவில் இரண்டு வார காலத்திற்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ், பாகிஸ்தானில் நீதி செத்துவிட்டது என விமர்சித்தார்.  இதனிடையே  மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கானை கைது செய்ய லாகூர் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் இஸ்லாமாபாத் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு  பதற்றம் அதிகரித்துள்ளது. அத்துடன் இம்ரான் கான் மீது இன்னும் 140 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.