ஏதாவது குற்றம் சாட்டப்பட்டதால், அது உண்மையாகி விடாது... அதானிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர்

 
டோனி அபோட்

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் மறுத்தார். மேலும், ஏதாவது குற்றம் சாட்டப்பட்டதால், அது உண்மையாகி விடாது என்று அதானிக்கு ஆதரவாக டோனி அபோட் தெரிவித்தார்.

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக முறைகேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது. ஆனால் இதனை அதானி குழுமம் மறுத்தது. அதேசமயம், ஹிண்டன்பர்க்-அதானி விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இருப்பினும், தற்போது அதானி குழுமத்துக்கு ஆதரவாக குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல பொருளாதார நிபுணர் சுவாமிநாதன் எஸ்.அங்கிலேசாரியர் ஐயர், சூழ்ச்சி மற்றும் அரசியல் சலுகைகள் மூலம் அதானி செல்வத்தை ஈட்டினார் என்ற எதிர்கட்சிகளின் விமர்சனத்தில் எனக்கு உடன்பாடில்லை என தெரிவித்து இருந்தார்.

சுவாமிநாதன் எஸ்.அங்கிலேசாரியர் ஐயர்

தற்போது ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட், கவுதம் அதானி  மற்றும் அதானி குழுமத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.  ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க்  நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கள் குறித்து டோனி அபோட் கூறியதாவது: குற்றச்சாட்டுகளை கூறுவது எளிது. ஏதாவது குற்றம் சாட்டப்பட்டதால், அது உண்மையாகி விடாது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை நீங்கள் நிரபராதி என்பதுதான் பொதுச் சட்டத்தின் கொள்கைகள் என்பது என் நினைவு. எனவே ஏதேனும் இருந்தால், கட்டுப்பாட்டாளர்கள் அதை பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன். 

அதானி

ஆனால் என்னை பொறுத்த வரையில் அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் காட்டிய நம்பிக்கைக்கு  நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது, அவர்கள் ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்புகள் மற்றும் செல்வங்களை உருவாக்கியுள்ளனர் என்பது ஒரு ஆஸ்திரேலியர் என்ற முறையில் எனக்கு தெரியும். பல்வேறு சந்தை பரிவர்த்தனைகள் மற்றும் பலவற்றை பற்றி கூறப்பட்ட கூற்றுகளை பொறுத்தவரை, அவற்றில் ஏதேனும் இருந்தால், அது சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டாளரிடம் பரிந்துரைக்கப்படும் என்று நான் நம்புகிறேன், அதை அவர்கள் சமாளிப்பார்கள் ஏனென்றால் அதானி சட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனம். இந்தியா சட்டத்தின் கீழ் செயல்படும் நாடு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.