இரவு ஊரடங்கு நேரம் நீட்டிப்பு.. புதிய கட்டுபாடுகள் அறிவிப்பு.. மீறினால் ரூ.25,000 அபராதம்..

 
அசாம் இரவு நேர ஊரடங்கு


நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.. இந்தியவில் கொரோன தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை தொட்டிருப்பது மக்களை கலக்கமடையச் செய்துள்ளது. இதேபோல ஒமைக்ரான் பாதிப்பும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த  பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில்  ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருந்த அசாம் மாநில அரசு,  தற்போது ஊரடங்கு நேரத்தை நீட்டித்திருக்கிறது.   மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.  இந்த புதிய கட்டுப்பாடுகள்  நாளை (ஜன8 ) முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 11.30 முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் , தற்போது  இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதேபோல தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்ள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி

 இரண்டு தவணை தடுப்பூசி செய்துகொண்டவர்கள் மட்டுமே உணவகங்கள்,  தங்கும் விடுதிகள்,  திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட  இடங்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும்,  கட்டுப்பாடுகளை மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்  அசாம் அரசு எச்சரித்துள்ளது.  மேலும் அரசு அலுவலகங்களில் தடுப்பூசி போடாத பணியாளர்கள் ஜனவரி 15 க்கு பிறகு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும்,  புதிய விதிகளின் படி அவர்களுக்கு ஊதியமில்லாத விடுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் முதலமைச்சர்

அரசு  மற்றும் தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் , உணவகங்கள், தாபாக்கள், காய்கறி கடைகள், மளிகை, பழக்கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும்,  உணவகங்களில் பார்சல் சேவைகள் மட்டும் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.  அதோடு 1- 5  வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் முறையே  தொடர்கிறது என்றும் தெரிவித்துள்ளது.  அதாவது  அவர்கள் மூன்று நாட்கள்  நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மீதமுள்ள நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.