இந்தியாவை உண்மையான மதச்சார்ப்பற்ற நாடாக மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது.. அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா

 
ஹிமாந்தா பிஸ்வா சர்மா

இந்தியாவை உண்மையான  மதச்சார்ப்பற்ற நாடாக மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் கரிம்நகரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பங்கேற்றார். அந்த பொதுக்கூட்டத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா உரையாற்றுகையில் கூறியதாவது: அசாமில் லவ் ஜிகாத்தை நிறுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். மேலும் மாநிலத்தில் உள்ள மதரஸாக்களை மூடும் நோக்கில் செயல்படுகிறோம். நான் முதல்வர் ஆன பிறகு, அசாமில் 600 மதரஸாக்கள் மூடப்பட்டது. 

மதரஸா

இந்த ஆண்டில் மேலும் 300 மதரஸாக்களை மூடுவேன் என்று ஒவைசியிடம்  கூற விரும்புகிறேன். இந்தியாவில் நாலு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிற சிலர் இருக்காங்க. அதுதான் அவங்க நினைப்பு. ஆனால் நாலு திருமணம் பண்ண முடியாதுன்னு சொல்றேன். அந்த நாள் முடிய போகுது. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவில் பொது சிவில் சட்டம் வரப்போகிறது. மேலும், இந்தியாவை உண்மையான  மதச்சார்ப்பற்ற நாடாக மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொது சிவில் சட்டம்

கடந்த மார்ச் மாதத்தில் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் மாநிலத்தில் 600 மதரஸாக்களை மூடியுள்ளேன். எங்களுக்கு மதரஸாக்கள் வேண்டாம். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எங்களுக்கு வேண்டும் என்பதால் அனைத்து மதரஸாக்களையும் மூட உத்தேசித்துள்ளேன் என்று தெரிவித்தார்.