இந்த ஆண்டு இறுதிக்குள் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தில் இருந்து அசாம் விடுவிப்பு.. ஹிமாந்தா பிஸ்வா சர்மா விருப்பம்

 
ஹிமாந்தா பிஸ்வா சர்மா

இந்த ஆண்டு இறுதிக்குள் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தில் இருந்து அசாம் விடுபடுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்று அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958, அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என கருதப்படும் பகுதிகளில் ஆயுதமேந்திய ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவ படையினருக்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போது அவர்களுக்கு என தனியாக சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. இந்த சட்டத்தின்கீழ், பாதுகாப்பு படை வீரர்கள் வாரண்ட் இல்லாமல் எந்தவொரு நபரையும் கைது செய்யவும், சோதனை செய்யவும்  முடியும். நிலைமை கையை மீறும் பட்சத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தவும் இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது. 1990 நவம்பரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின்கீழ் அசாம் மாநிலம் தொந்தரவான பகுதி என அறிவிக்கப்பட்டது. அது முதல் ஒவ்வொரு 6 மாதமும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. 

ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்

இந்நிலையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின்கீழ் தொந்தரவான பகுதிகள் அறிவிக்கையில் இருந்து முழு அசாமையும் நீக்கியது. இருப்பினும் அசாமில் 9 மாவட்டங்கள் மற்றும் ஒரு மாவட்டத்தின் துணை பிரிவிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தில் இருந்து அசாம் விடுவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். கவுகாத்தியில் நடைபெற்ற கருத்தரங்கில் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: நாங்கள் அதை  நோக்கி வேலை செய்கிறோம். 

பாதுகாப்பு படை வீரர்கள்

எங்கள் யோசனை என்னவென்றால் இந்த ஆண்டு இறுதிக்குள்  அசாம் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தில் (ஏ.எஃப்.எஸ்.பி.ஏ.) இருந்து முற்றிலும் விடுபடுவதை காண விரும்புகிறோம். இருப்பினும் 100 சதவீதம் வெற்றி பெறுவதா அல்லது 90 சதவீதம் வெற்றி பெறுவதா என்பது காவல்துறை தன்னைப் பலப்படுத்துகிறதா என்பதை பொறுத்தே அமையும். நான் கமாண்டன் மாநாட்டில் உரையாற்றினேன். அடிப்படையில், அசாமில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் இல்லாத சூழ்நிலையை உருவாக்குமாறு நான் காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன். ஆனால் காவல்துறை 100 சதவீதம் வெற்றி பெறவில்லை என்றால், ஐந்து மாவட்டங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் தொடரும். காவல்துறை வெற்றி பெற்றால் அதை திரும்ப பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.