"அனுமனின் ஆசிர்வாதம்" சிறையிலிருந்து வந்தவுடன் ஓங்கி ஒலித்த கெஜ்ரிவால்

 
ArvindKejriwal speaking with Aam Aadmi Party members

மதுபான கொள்கை வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையானார். சிறைக்கு வெளியே காத்திருந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களை பார்த்து கெஜ்ரிவால் கையசைத்தால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

அதன்பின் தொண்டர்கள் மத்தியில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,  “எனக்கு அனுமனின் ஆசி எப்போதும் உள்ளது. நாளை அனுமனின் ஆலயத்திற்கு சென்று வழிபடுகிறேன். நாம் அனைவரும் இணைந்து சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம். சர்வாதிகார சக்திகளிடம் இருந்து நாட்டை நாம் காப்பாற்றவேண்டும். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமீன் கொடுத்துள்ளதையொட்டி சிறையில் இருந்து வெளியே வந்தார். இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1ம் தேதி வரை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி, முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடதக்கது.