அரசு பங்களாவை காலி செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..

 
arvind kejriwal

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வ முதலமைச்சர் இல்லத்தை காலி செய்வது மக்களோடு மக்களாக வழவுள்ளதாக ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். 

டெல்லி முதலமைச்சர்களுக்கு டெல்லி அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் முதலமைச்சரின் இல்லம் டெல்லியில் உள்ள சிவில் லைன் பகுதியில் உள்ளது. சமீபத்தில் குறிப்பிட்ட அரசு இல்லத்தை டெல்லி அரசு 45 கோடி ரூபாய் அளவிற்கு புனரமைத்ததாக சர்ச்சைகள் எழுந்தன. சொகுசு வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட அரசு பங்களாவில் அரவிந்த் கெஜ்ரிவால் வசித்துவந்தார். மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால்  நேற்று அவரது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இதனால் அரசு பங்களாவை கெஜ்ரிவால் காலி செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகிறது. 

அரசு பங்களாவை காலி செய்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..

இதேபோல் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள அதிஷி டெல்லி மதுரா சாலையில் உள்ள அமைச்சர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் டெல்லியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்த போதே, அரசு பங்களாவை காலி செய்யவும் முடிவு செய்ததாகவும், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக  தெரிவித்தார்.  ஆனால் கெஜ்ரிவால் எங்கு குடியேறப் போகிறார் ? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.  இதனால் இன்னும் சில வாரங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பங்களாவை காலி செய்வார் எனவும், முதலமைச்சர்களுக்கான அரசு பங்களாவில் அதிஷி குடியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.