அமலாக்கத்துறை, சி.பி.ஐ., கவர்னரை பயன்படுத்தி எதிர்க்கட்சி அரசாங்கங்களை தொந்தரவு செய்கிறார்கள்... கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

 
அரவிந்த் கெஜ்ரிவால்

ரப்ரி தேவி வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதைகுறிப்பிட்டு, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் கவர்னரை பயன்படுத்தி எதிர்க்கட்சி அரசாங்கங்களை தொந்தரவு செய்கிறார்கள் என்று மத்திய பா.ஜ.க. அரசை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கினார்.

ஐ.ஆர்.சி.டி.சி. ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ரப்ரி தேவி ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் நேற்று ரப்ரி தேவி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், ரப்ரி தேவியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ரப்ரி தேவியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரப்ரி தேவி

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆசிரம மேம்பாலம் திறப்பு விழாவில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: ரப்ரி தேவி வீட்டுக்கு சி.பி.ஐ. குழுவினர் சென்றது தவறு. இது போன்ற சோதனைகள் அவமானகரமானவை. நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சி தலைவாகள் எழுதிய கடிதத்தையும், ரப்ரி தேவி வீட்டில் நடைபெற்ற சோதனையும் தொடர்புப்படுத்தி பார்க்கலாம். எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் இருந்தாலும், இது ஒரு ட்ரெண்டாகி வருகிறது. எதிர்க்கட்சி அரசாங்கங்களை அவர்கள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் கவர்னரை பயன்படுத்தி எதிர்க்கட்சி அரசாங்கங்களை தொந்தரவு செய்கிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் ஜனநாயகம் முன்னேறும். யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவர் கபில் சிபல் டிவிட்டரில், லாலு மீது சி.பி.ஐ. சூடு. அவரது உடல் நிலை மோசமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். தேஜஸ்விக்கு அழுத்தம் கொடுக்க அரசாங்கம் இதை எவ்வளவு அதிகமாக செய்கிறதோ, அவ்வளவு அதிகமாக மக்கள் இந்த அரசுக்கு எதிராக திரும்புவார்கள் என பதிவு செய்துள்ளார்.