கூட்டணிக்கு பாரத் என நாங்கள் பெயர் வைத்தால் என்ன செய்வீர்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்

கூட்டணிக்கு பாரத் என நாங்கள் பெயர் வைத்தால் என்ன செய்வீர்கள்? என பாஜகவுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜி 20 அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. எனவே இந்தியாவை பாரத் என பெயர் மாற்றம் செய்யும் மசோதா நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்திருப்பதால்தான் பாஜக இந்தியாவை பாரத் என பெயர் மாற்றம் செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இந்த நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது. ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமல்ல. எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என கூட்டணிக்கு பெயர் வைத்த காரணத்துக்காக மத்திய அரசு நாட்டின் பெயரை மாற்றிவிடுமா? எங்கள் கூட்டணியின் பெயரை பாரத் என நாங்கள் மாற்றினால், நாட்டின் பெயரை பாஜக என மாற்றுவார்களா?.ஓட்டுக்காகவே பாஜகவினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது நாட்டுக்கு செய்யும் துரோகம்” எனக் கூறினார்.