அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க வேண்டும்.. அர்ஜூன் ராம்

 
அர்ஜூன் ராம் மேக்வால்

அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிந்தவரை குறைக்க வேண்டும்  என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நேற்று அதிரடியாக சிறிய மாற்றம் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ, மத்திய புவி அறிவியில் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். அதேசமயம் நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சட்டத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். அர்ஜூன் ராம் மேக்வால் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.

நீதிமன்றம்

சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அர்ஜூன் ராம் மேக்வால் பேசுகையில், அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிந்தவரை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: என் மீது நம்பிக்கை வைத்துள்ள பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அரசியலமைப்பு சட்டம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது. அதன்படி நான் செயல்படுவேன். எதிர்வரும் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கும் எனது நியமனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கிரண் ரிஜிஜூ

நிர்வாகத்திற்கும் (மத்திய அரசுக்கும்), நீதித்துறைக்கும் ஒரு நல்லுறவு உள்ளது, அது சுமூகமாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் இருக்கும். எல்லைகள் ஏற்கனவே உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு முன் சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ மத்திய அரசாங்கத்தில் மிக உயர்ந்த அமைச்சர்களில் ஒருவராகவும், பிரச்சினைகளை தீர்ப்பவராகவும் அறியப்பட்டவர்.  கேபினட் அந்தஸ்துடன் சட்ட அமைச்சகத்திற்கு பதவி உயர்வு பெற்று ஒரு ஆண்டுக்குள், கிரண் ரிஜிஜூ ஒப்பீட்டளவில் குறைந்த பதவியான புவி அறிவியல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.