திடீர் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - மத்திய அரசு

 
vaccine

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு பிறகு மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்பதற்கு எந்த ஒரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

heart

இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் 28.1 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக 30-60 வயது நபர்களின் இறப்பு 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்ததாகவும் மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. இளம் வயதினர் மாரடைப்பால் ஏற்படும் பிரச்சனைக்கு பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளாததே 98.4 சதவீதம் காரணம் என விளக்கம் அளித்திருந்தது. மேலும் புகையிலை பயன்பாடு காரணமாக 32.8 சதவீதம் பேருக்கும், மதுபான பயன்பாட்டின் காரணமாக 15.9 சதவீதம் பேருக்கும், போதிய உடற்பயிற்சியின்மை காரணமாக 41 சதவீதம் பேருக்கும் மாரடைப்பு ஏற்படுவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரே இளம்வயதினருக்கு மாரடைப்பு அதிகம் ஏற்படுவதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், “கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு அதிகளவில் திடீர் மாரடைப்பு ஏற்படுவது குறித்து எந்த தரவுகளும் அரசிடம் இல்லை. கொரோனா தடுப்பூசியால்தான் இது ஏற்படுகிறது என்பதற்கு எந்தவித அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.