திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு- நடிகை குமுறல்

 
tirupati

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த தன்னை  டிக்கட் இல்லை என கூறி அவமானப்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி உத்தர பிரதேசத்தை  சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் நடிகையுமான அர்ச்சனா கெளதம் செல்ஃபி வீடியோ வெளியிட்டுள்ளார்.

తిరుమలలో నటి అర్చన గౌతమ్ హల్ చల్

திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக உத்தர பிரதேஷ் மாநிலம் ஹஸ்தினாபுர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையிமான அர்ச்சனா கெளதம் கடந்த வாரம் வியாழக்கிழமை திருப்பதி வந்துள்ளார். அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு  பத்தாயிரம்  ரூபாய் நன்கொடை வழங்கி அதன் பிறகு வி.ஐ.பி. டிக்கெட் ₹ 500  செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அங்கு உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி அந்த அலுவலகத்தில் இருந்தபடி செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார்.இந்த விடியோயை நடிகை அர்ச்சனா கெளதம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .அதில் இந்து மத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டதாகவும். மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விஐபி தரிசனம் என்ற பெயரில் 10,500 கேட்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், “இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரின் சிபாரிசு கடிதத்தின் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதி திருமலைக்கு வந்தனர். அவர்களுக்கு இந்த கடிதத்திற்கு ரூ 300 சிறப்பு தரிசனம் தருவதாக கூறி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அவர் அந்த டிக்கெட்டை பெறாமல் 1 ம் தேதி வியாழக்கிழமை இணை செயல் அதிகாரி அலுவலகத்திற்கு வந்து தனக்கு வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வழங்க வேண்டும் என கேட்டார். அதற்கு உங்களுக்கு ஏற்கனவே ரூ 300 டிக்கெட் அந்த கடிதம் மூலம் வழங்கப்பட்டது நீங்கள் வாங்கவில்லை. மேலும் வெள்ளிக்கிழமை அபிஷேகம் நடைபெறுவதால் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசனம் வழங்கப்படுவதில்லை. எனவே உங்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வேண்டுமென்றால் ரூபாய் பத்தாயிரம் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கி அதன் பின்னர் 500 ரூபாய் செலுத்தினால் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர் தவறாக புரிந்து கொண்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு செல்ஃபி வீடியோ எடுத்து அலுவலகத்தில் இருந்த அனைவரையும் திட்டிக்கொண்டு இருந்தார். இதனால் அவரை அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றினர்” என தெரிவித்துள்ளனர்.