உத்தர பிரதேசம் இடைத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி... அப்னா தளம் (சோனேலால்) கட்சி வேட்பாளர்கள் வெற்றி

 
பா.ஜ.க.

உத்தர பிரதேசத்தில்  நடைபெற்ற சுவர் மற்றும் சான்பே  ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அப்னா தளம் (சோனேலால்)  வெற்றி பெற்றுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சுவர் சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம் கானின் மகன் அப்துல்லா அசம் கான். 15 ஆண்டுகள் பழமையான வழக்கில் அப்துல்லா அசம் கானுக்கு மொராதாபாத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனையடுத்து அப்துல்லா அசம் கான் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி 13ம் தேதியன்று அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

ஷபீக் அகமது அன்சாரி

இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி அனுராதா சவுகானை வேட்பாளராக நிறுத்தியது. பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அப்னா தளம் (சோனேலால்) சார்பில் ஷபீக் அகமது அன்சாரி போட்டியிட்டார். கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்னா தளம் (சோனேலால்) வேட்பாளர் ஷபீக் அகமது அன்சாரி தனது நெருங்கிய போட்டியாளரான சமாஜ்வாடி கட்சியின் அனுராதா சவுகானை 8,724 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாக கருதப்படும் பகுதியில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


 ரிங்கி கோல்
மிர்சாபூரில்  உள்ள சான்பே சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த அப்னா தளம் (சோனேலால்) கட்சியின் ராகுல் பிரகாஷ் கடந்த பிப்ரவரியில் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதிக்கும் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்னா தளம் (சோனேலால்) கட்சி மறைந்த எம்.எல்.ஏ. ராகுல் பிரகாஷின் மனைவி ரிங்கி கோலை நிறுத்தியது. சமாஜ்வாடி வேட்பாளராக கீர்த்தி கோல் போட்டியிட்டார். இந்த தொகுதியில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. சான்பே சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அப்னா தளம் (சோனேலால்) கட்சி வேட்பாளர் ரிங்கி கோல் தனது நெருங்கி போட்டியாளரான கீர்த்தி கோலை 9,585 வாக்குகள் வித்தியாசத்தில்  தோற்கடித்தார்.