வாட்ஸ் ஆப் செயலி மூலம் அரசின் 161 சேவைகளை வீட்டில் இருந்தே பெறலாம்! அசத்தும் ஆந்திரா

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது வழக்கம். தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பொதுமக்களுக்கு சேவைகளை வழங்க வேண்டும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும் அவரது மகனுமான லோகேஷுக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்காக மெட்டா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆந்திர மாநில அரசு வாட்ஸ் ஆப் செயலி மூலம் பொது மக்களுக்கு வீட்டிலிருந்து அனைத்து சான்றிதழ்களும் பெறும் சேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஆந்திர மாநில அரசு ஏற்பாடு செய்தது. இதற்காக பொதுமக்கள் வாட்ஸ்அப் செயலி மூலம் அரசின் 161 விதமான சேவைகளை பெரும் மன மித்ரா என்ற பெயரிலான வாட்ஸ்அப் கவர்னென்ஸ் சேவை திட்ட செயல்பாட்டை மாநில தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் இன்று உண்டவள்ளியில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் லோகேஷ் இனிமேல் ஆந்திர மாநிலத்தில் பொதுமக்கள் அனைத்து அரசு சான்றிதழ்களையும் வாட்ஸ் அப் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வாட்ஸ்அப் சேவைகளுக்கான எண்ணாக 9552300009 என்ற எண்ணை அறிவித்த அவர் நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திர அரசு வாட்ஸ்அப் மூலம் சிவில் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது. முதற்கட்டமாக வாட்ஸ்அப் மூலம் 161 சேவைகள் வழங்கப்படும். இதில் இந்து அறநிலையத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்து கழகம், வருவாய்த்துறை, அண்ணா கேண்டீன், நகராட்சி துறை ஆகிய துறைகளின் சேவைகளை பொதுமக்கள் இந்த எண் மூலம் வாட்ஸ் அப்பில் பெற முடியும்.
இதனால் சான்றிதழுக்காக மக்கள் அரசு அலுவலகங்களை சுற்றி வரும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆந்திர அரசு முடிவுக்கு கொண்டு வருகிறது. வாட்ஸ் அப் கவர்னன்ஸ் சேவையில் பங்குபெறும் பொது மக்களின் தனிப்பட்ட தகவல்கள் சைபர் குற்றவாளிகளிடம் இருந்து தடுக்க தேவையான இணைய பாதுகாப்பு வசதிகளை செய்ய முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த அக்டோபர் 22, 2024 அன்று, வாட்ஸ்அப் மூலம் குடிமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் அரசும் மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, மாநில அரசு இப்போது வாட்ஸ்அப் நிர்வாகத்தை கொண்டு வருகிறது. விரைவான சேவைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வழங்குவது ஆகியவற்றிற்காக வாட்ஸ்அப் கவர்னர் சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் ஆந்திர அறநிலைய துறையின் முக்கிய கோவில்களில் வழங்கப்படும் தரிசன டிக்கெட்டுகளை பெறுவது, அறை முன்பதிவு செய்வது மற்றும் நன்கொடை வழங்குவது ஆகிய சேவைகளையும், விரைவில் திருமணம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகளும் இதன் கீழ் கொண்டுவரப்படும்.
வருவாய் துறை மூலம் பொதுமக்கள் அளித்த விண்ணப்பங்களின் தற்போதைய நிலை, பத்திரப்பதிவிற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது, சாதி, வருவாய், இருப்பிடம் உள்ளிட்ட முக்கிய சான்றிதழ்களை பெறுவது ஆகிய சேவைகளையும், நகராட்சித் துறை மூலம் சொத்து வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மற்றும் வர்த்தக உரிமங்கள் பெறுவது ஆகிய சேவைகளையும், மின்சாரத் துறையில் மின் கட்டணம் செலுத்துவது போன்ற சேவைகளையும் பொதுமக்கள் இந்த வாட்ஸ்அப் கவர்னன்ஸ் மூலம் எளிதில் பெற முடியும் என்று அப்போது கூறினார். உலகிலேயே முதல்முறையாக ஆந்திர மாநிலத்தில் இந்த சேவை கொண்டுவரப்படுகிறது. இதில் எழக்கூடிய ஒவ்வொரு சவால்களும் படிப்படியாக குறைத்து பொதுமக்களுக்கு சுலபமான முறையில் பயன்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும். இரண்டாவது கட்டமாக மேலும் பல்வேறு சேவைகள் வாட்ஸ் அப் கவர்னன்ஸ் திட்டத்திற்குள் கொண்டுவரப்படும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.