வாக்கு இயந்திரத்தை தூக்கிப்போட்டு உடைத்த வேட்பாளர்! ஆந்திராவில் பரபரப்பு

 
ஆந்திரா

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ வேட்பாளர் பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி வாக்கு இயந்திரத்தை உடைத்து சேதப்படுத்திய வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

ஆந்திராவில் கடந்த 13-ம் தேதி நடந்த வாக்குப்பதிவு நாளிலும், அதன் பிறகும் நடந்த வன்முறை சம்பவத்தில் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.  மே 13-ம் தேதி வாக்குப்பதிவின் போது, ​​மச்சர்லா தொகுதி எம்எல்ஏவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி ரெண்டசிந்தலா மண்டலம் பால்வாய்கேட் வாக்குச்சாவடி மையத்திற்குள் (202) ஆதரவாளர்களுடன் சென்று வாக்குச்சாவடியில் இருந்த ஊழியர்களை மிரட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்தார். அதனை தடுக்க முயன்ற வாக்குச்சாவடி முகவரை எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் தாக்கினர்.இந்த காட்சிகள் அனைத்தும் வெப் கேமராவில் பதிவானது. மத்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட எஸ்ஐடி ( சிறப்பு விசாரனை குழு ) விசாரணை நடத்தியதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதல் வீடியோ என விசாரணையில் தெரிய வந்தது.  இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார்  மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.  தற்போது தெலுங்கு தேச கட்சி உள்பட பலர் இந்த வீடியோவை வைரல் செய்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r