புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடிதான் திறந்து வைப்பார் - அமித்ஷா திட்டவட்டம்..

 
amit shah


புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில்,  கட்டிடத்தை பிரதமர் மோடிதான் திறந்துவைப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

தலைநகர் டெல்லியில்  64ஆயிரத்து 500 சதுர அடியில் , முக்கோண வடிவில், 4 மாடிகளுடன்  புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வருகிற 28ம் தேதி சாவர்க்கர் பிறந்த நாளில்  பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.  ஆனால் மரபுப்படி நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை வலியுறுத்தி திமுக, விசிக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), சிவசேனா (யுபிடி), திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி), ஜனதா தளம் (ஐக்கிய) உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற  கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக  அறிவித்துள்ளன.
 புதிய நாடாளுமன்றம் கட்டடம்
இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடிதான் திறந்து வைப்பார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா,  “புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின்போது சோழர்களின் செங்கோல் பிரதமர் மோடியிடம் அளிக்கப்படும். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்கு சான்றாக சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோல் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த ஆதினஙகள் டெல்லியில் பிரதமரிடம் செங்கோலை ஒப்படைப்பர். புதிய நாடாளுமன்ற கட்டடம் என்பது பிரதமர் நரேந்திரமோடியின் கனவு. பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைக்கு எடுத்துக்காட்டு புதிய நாடாளுமன்ற கட்டடம்.

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட 60 ஆயிரம் பேரை பிரதமர் கௌரவிப்பார். தமிழ்நாட்டில் உள்ள ஆதினங்கள் வழங்கிய செங்கோல்கள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திரமோடியே திறந்துவைப்பார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டிய 60,000 தொழிலாளர்களை பிரதமர் பாராட்டி கௌரவிப்பார்” என்று தெரிவித்தார்.