காணொலி காட்சி மூலம் நீதிபதி முன் அல்லு அர்ஜூன் ஆஜர்
சந்தியா தியேட்டர் சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் காணொலி காட்சி மூலம் நாம்பள்ளி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜாரானார்.
புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானர். அவரது மகன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சிக்கடப்பள்ளி போலீசார் அல்லு அர்ஜுனை கடந்த 13- ம் தேதி கைது செய்தனர். பின்னர், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதன்பின், காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, நம்பப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அல்லு அர்ஜுன் சஞ்சல்குடா சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். மறுபுறம் அல்லு அர்ஜுன் தன் மீது சிக்கடப்பள்ளி போலீசார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர்நீதிமன்றம் அதை விசாரித்து இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து சிறையில் ஒருநாள் இரவு முழுவதும் இருந்து பின்னர் ஜாமினில் அல்லு அர்ஜுன் வெளியே வந்தார்.
இந்நிலையில் நாம்பள்ளி நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு வழக்கிய 14 நாள் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. நாம்பள்ளி நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது, இதில் அல்லு அர்ஜுன் நீதிமன்றம் வந்தால் மீண்டும் ரசிகர்கள் கூட்டம் சேரும் என்பதால் நேரில் ஆவதில் இருந்து விலக்கு அளித்து காணொலி காட்சி மூலம் ஆஜராக நீதிபதி கூறியதால் அதிகாரிகள் அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்தனர். இதனையடுத்து காணொலி காட்சி மூலம் அல்லு அர்ஜுன் நீதிபதி முன்பு ஆஜாரானார். அப்போது அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளதால் அல்லு அர்ஜுன் தரப்பு வழக்கறிஞர்கள் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜராகி நிரந்தர ஜாமின் வழங்க கேட்டு கொண்டனர். இதற்கு நீதிபதி அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய கூறியதால் போலீசார் இதற்கு கால அவகாசம் வேண்டும் என கூறினர். இதனால் 30-ம் தேதிக்கு இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 10 ம் தேதி வரை உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால் ஜாமின் உள்ளதால் நீதிமன்ற காவல் நீட்டிப்பு குறித்து 10-ம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதி கூறினர்.