காவிரி விவகாரம் - மோடியை சந்தித்து பேச கர்நாடக அனைத்துகட்சி கூட்டத்தில் முடிவு

 
all party meet

காவிரி, மேகதாது மற்றும் மகாதாயி நதிநீர் பங்கிட்டு பிரச்னை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

காவிரி நதிநீர் பிரச்னை குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் இன்று பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இதில் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், மாநில அமைச்சர்கள் என்.செலுவராயசாமி, எச்.கே.பாட்டீல், கே.ஜே.ஜார்ஜ், சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமலதா, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜக்கேஷ், தேஜேஷ்வி சூர்யா, முன்னாள் முதல்வர்கள் எம்.வீரப்பமொய்லி, பி.எஸ்.எடியூரப்பா, டி.வி.,சதானந்தகவுடா, எச்.டி.குமாரசாமி, ஜெகதீஷ்ஷெட்டர், பசவராஜ்மொம்மை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் மாநில அரசின் தலைமை வக்கீல் சசகிரண் ஷெட்டி கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்த காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் நடத்தபட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து துணை முதல்வரும் நீர்பாசன துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் பேசும்போது, காவிரி விஷயத்தில் மாநிலத்தின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இதில் விட்டு கொடுத்துபோகும் பேச்சுக்கு இடமில்லை. காவிரி விஷயத்தில் மாநிலத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ள சட்ட போராட்டத்தை சந்திக்க தயாராகவுள்ளோம். இந்த விஷயத்தில் மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.