ஐக்கிய ஜனத தள தலைவர்கள் பேச்சு எதிரொலி.. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் இடையே விரிசல்?..

 
நிதிஷ் குமார்

2025ல் பீகாரை நிதிஷ் குமார் வழிநடத்துவார் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் பேசியிருப்பது, பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் இடையே எல்லாம் சரியாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லாலன் சிங் கடந்த திங்கட்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 2025ம் ஆண்டு வரை நிதிஷ் குமாரே பீகாரின் முதல்வராக இருப்பார்.2025ம் ஆண்டில் நடைபெறவுள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார். மேலும் ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறுகையில், 2025ல் நிதிஷ் குமார் பீகாரை வழிநடத்துவார், 2030லும் நிதிஷ் குமார் தலைமை தாங்குவார் என தெரிவித்தார்.

லாலன் சிங்

ஐக்கிய ஜனதா தள தலைவர்களின் கருத்து மெகா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தள்ளதாக தெரிகிறது.  மேலும் நிதிஷ் குமாருக்கும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கும் இடையே எல்லாம் சரியாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் பாபு சபாகாரில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் அதன் தாக்கம் எதிரொலித்தது.

தேஜஸ்வி யாதவ்

பாபு சபாகாரில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவசாயிகள் கூட்டம் சரியாக காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல்வர் நிதிஷ் குமார் சரியான நேரத்துக்கு வந்து விட்டார். அதேசமயம் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சுமார் 1 மணிக்கு வந்தார். பொதுவாக விதிமுறைகளின்படி, முதல்வர் வருவதற்கு முன் துணை முதல்வர் வர வேண்டும். தேஜஸ்வி யாதவ் தாமதமாக வந்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.