உ.பி.யில் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாக்வாடி கட்சியில் இணைந்த பாஜக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள்...

 
உத்தரப்பிரதேசம்  தேர்தல்

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவில் இருந்து விலகிய  அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் இன்று  அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர்.

உத்தரப்பிரதேசத்தில்  வருகிற பிப்ரவரி மாதம் (பிப்.10, பிப்.14, பிப்.20, பிப்.23, பிப்.27.,மார்ச் 3, மார்ச் 7)  7 கட்டங்களாக  சட்டமன்ற தேர்தல் நடைபெற  இருக்கிறது.   மார்ச் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  இந்தியாவிலேயே பெரிய மாநிலமான  உ.பி.யில் சுமார் 23.5 கோடி மக்கள்தொகை உள்ளது. அதேபோல் மொத்தம்  உள்ள 403 தொகுதிகளில்  உள்ளன.  அங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகளும்  தீவிரம் காட்டி வருகின்றன.  ஆனால் ஆளும்கட்சியான பாஜகவில் இருந்து  கொத்தாக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள்  பதவியை ராஜினாமா செய்துவிட்டு எதிர் கட்சிக்கு தாவியுள்ளனர்.  

உத்தரப்பிரதேசம் தேர்தல் - அகிலேஷ் யாதவ்
உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்  என முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மார்தட்டிக் கொண்டிருக்கும் சூழலில் , அங்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் கிராப் எகிறிக்கொண்டிருக்கிறது. அங்கு இதுவரை 7 எம்.எல்.ஏக்கள்  மற்றும்  3 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். முதலில் தொழிலாளர் நலத்துறை  அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மௌரியா 2 தினங்களுக்கு முன்  பதவி விலகினார். அவரைத்தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 6  பேர் கொத்தாக பாஜாகவில் இருந்து விலகி அகிலேஷ் யாதவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல்  துறை அமைச்சராக இருந்த தாரா சிங் சௌகான் நேற்று முன் தினம் ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகினார்.  நேற்று அமைச்சர் தரம் சிங் சைனியும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  தொடர்ந்து அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்தும் பேசினார். இதுவரை 3 அமைச்சர்கள் உள்பட 10 பாஜக எம்.எல்.ஏக்கள் பதவி விலகியிருந்த நிலையில், இன்று அனைவரும் சமாஜ்வாடி கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.

அகிலேஷ் யாதவ்

உ.பி.யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் அனைவரும் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.  பதவி விலகிய பாஜக எம்.எல்.ஏக்கள் சுவாமி பிரசாத் மௌரியா, தரம் சிங் சைனி, பகவதி சாகர், வினய் ஷக்யா, நீரஜ் குஷ்வாலா மௌரியா, பல்ராம் சைனி, ராஜேந்திர பிரதாப் சிங் ஆகியோர் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் வித்ரோஹி மௌரியா, முன்னாள் தலைமைக் காவல் அதிகாரி பதம் சிங்,  காங்கிரஸ் எம்.எல்.ஏ பன்சி சிங் பஹத்யா ஆகியோரும்  அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்துள்ளனர். ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக்தளம் போன்ற கட்சிகள் சமாஜ்வாதி கூட்டணியில் உள்ள நிலையில் , தற்போது மேலும் அக்கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக அமைச்சர்கள்  மற்றும் எம்.எல்.ஏக்கள் இணைந்திருக்கின்றனர்.. அகிலேஷ் யாதவின் களப்பணி உ.பி., தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.