பிரதமரும், ஆளும் கட்சியும் மக்களை மகிழ்விப்பதில் வல்லவர்கள்... ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கிண்டல்

 
ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பை குறிப்பிட்டு, பிரதமரும், ஆளும் கட்சியும் மக்களை மகிழ்விப்பதில் வல்லவர்கள் என்று காங்கிரஸின் ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கிண்டல் செய்தார்.

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்க மத்திய அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒப்புதல் அளித்தது. இது கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கேஸ் விலை குறைப்பு விவகாரத்தில், மோடியையும், மத்திய பா.ஜ.க. அரசையும் ஆஹிர் ரஞ்சன் கிண்டல் செய்துள்ளார்.

சமையல் கேஸ் சிலிண்டர்

சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு தொடர்பாக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை உறுப்பினருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், பிரதமரும், ஆளும் கட்சியும் மக்களை மகிழ்விப்பதில் வல்லவர்கள். பல மாநிலங்களில் தேர்தல் நடக்கப் போகிறது. நான் கேட்க விரும்புகிறேன், ராஜஸ்தான் அரசால் ரூ.500க்கு சிலிண்டர் வழங்க முடியும் என்றால் உங்களால் ஏன் முடியாது? என்று தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவ்

பீகாரின் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் எக்ஸில் (முன்பு டிவிட்டர்), இது அழுத்தம். (I.N.D.I.A. கூட்டணியின்) இரண்டாவது கூட்டத்திற்கு பிறகு, அவர்கள் (பா.ஜ.க.)  சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்திருக்கிறார்கள். எல்லாம் முடிவான பிறகு (கூட்டணியின்) பலத்தை நீங்கள் பார்க்கலாம் என்று பதிவு  செய்து இருந்தார்.