வரலாற்றை மறுப்பவர்கள் துரோகிகள், மம்தா பானர்ஜி ஒரு துரோகி... ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி

 
நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

வரலாற்றை மறுப்பவர்கள் துரோகிகள், மம்தா பானர்ஜி ஒரு துரோகி என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்தார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பிறகு, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது நிலைப்பாட்டை அறிவித்ததுடன், தனியாக போட்டியிட போவதாகவும், மம்தா பானர்ஜி ஒத்த எண்ணம் கொண்ட தலைவர்களை சந்திப்பார் என்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்தது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யா கூறுகையில், கடந்த 13ம் தேதியன்று காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற்றது.  அந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதியாக கலந்து கொண்டேன். எதிர்க்கட்சியின் பிக்பாஸ் என்று காங்கிரஸ் நினைக்கக் கூடாது. 

திரிணாமுல் காங்கிரஸ்

ராகுலை எதிர்க்கட்சி தலைவராக காட்ட பா.ஜ.க. விரும்புகிறது. அதனால் மோடி வெற்றி  பெறுவது எளிதாகும். காங்கிரஸ் சரியான நேரத்தில் வேலையை செய்யவில்லை. அவர்கள் பிராந்திய கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரித்து விட்டு, தேசிய அளவில்  எப்படி ஆதரவு கேட்க முடியம் என தெரிவித்து இருந்தார். மம்தா பானர்ஜி தனது அரசியல் பயணத்தை காங்கிரஸில்  தொடங்கினார். பின்னர் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.

ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

இந்நிலையில், காங்கிரஸ் தான் மம்தாவை உருவாக்கியது என்று திரிணாமுல் காங்கிரஸின் அறிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: காங்கிரஸால் மம்தா பானர்ஜி உருவாக்கப்பட்டார். மம்தா பானர்ஜி உருவாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் திருடர்களின் கட்சியாக மாறியது. அவரது உருவாக்கம் விஷமாகி விட்டது.  அவர் (மம்தா பானர்ஜி) இப்படியெல்லாம் சொல்கிறார்?. காங்கிரஸ் மம்தாவை உருவாக்கியது. வரலாற்றை மறக்க முடியாது. காங்கிரஸின் தயவால் மம்தா பானர்ஜி அமைச்சரானார். வரலாற்றை மறுப்பவர்கள் துரோகிகள், மம்தா பானர்ஜி ஒரு துரோகி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.