காங்கிரஸ் இல்லாமல் மேற்கு வங்கத்தில் முன்னேறுவது கடினம் என்பதை மம்தா பானர்ஜி உணர்ந்தார்... ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

 
ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

எதிர்வரும் மக்களவை  தேர்தலில் காங்கிரஸை ஆதரிப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ்  தலைவி மம்தா பானர்ஜி கூறியதை குறிப்பிட்டு, காங்கிரஸ் இல்லாமல் மேற்கு வங்கத்தில் முன்னேறுவது கடினம் என்று மம்தா பானர்ஜி கருதுகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வலுவாக இருக்கும் இடத்தில் அவர்களை எங்க கட்சி ஆதரிக்கும் ஆனால் அவர்களும் மற்ற கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் தெரிவித்தார். இது தொடர்பாக மேற்கு வங்க காங்கிரஸின் மூத்த தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: இன்று காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸூடன் புரிந்துணர்வு இல்லாமல் முன்னேற முடியாது என்று மம்தா பானர்ஜி நினைக்கிறார். கர்நாடக தேர்தலுக்கு முன்பு காங்கிரஸூக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறியதை நாம் கேட்டிருக்கிறோமா?. தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸூக்கு வாக்களிக்முாறு கர்நாடக மக்களிடம் அவர் ஒரு போதும் வேண்டுகோள் விடுத்ததில்லை. 

மம்தா பானர்ஜி

இதே மம்தா பானர்ஜிதான் உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் பா.ஜ.க.வுக்கு எதிராக போராடுபவர்களக்கு உதவினார். ஆனால் அவர் கர்நாடகா செல்லவில்லை. இன்று காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் இல்லாமல் மேற்கு வங்கத்தில் முன்னேறுவது கடினம் என்று அவர் கருதுகிறார். ஏனென்றால், மாநிலத்தில் காங்கிரஸின் பிடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன், முர்ஷிதாபாத்தின் சாகர்டிகியில் நடந்த இடைத்தேர்தலில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு பிறகு  மாபெரும் ஆணையால் நாங்கள் வெற்றி பெற்றோம். கர்நாடகாவில் நாங்கள் வெற்றி பெற்றாலும் ராகுல் காந்தியை ஒருமுறை கூட அவர் குறிப்பிடவில்லை. 

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

எதிர்க்கட்சியில் இருக்கும் ஒவ்வொரு பிராந்திய கட்சிகளும் எங்களுடன் இருந்ததா என்று பாராமல் ராகுல் காந்தி பற்றியும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை பற்றியும் பேசி வருகின்றனர். ஆனால் ராகுலை பற்றி மம்தா பானர்ஜி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டபோதும், ஒரு முறை கூட அவரது பெயரை மம்தா குறிப்பிடவில்லை. நேரடியாக பேசுங்க, காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தியுங்க, விவாதியுங்க. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தியுங்க. 2011ல் மேற்கு வங்கத்தில் நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது, சோனியா காந்தி இல்லாவிட்டால், மாநிலத்தை வெல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் இருந்து காங்கிரஸை விரட்டியத்தீர்கள். எனவே மேற்கு வங்கத்தில் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் எதிராக எங்கள் போராட்டம் நிச்சயமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.