அதானி விவகாரம்: 18 எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை.

 
Parliament


அதானி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று  18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்துகின்றன.  நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் காலை 10 மணிக்கு ஆலோசனை நடைபெறும் நிலையில்,  எதிர்க்கட்சிகளை குறி வைக்கும் அமலாக்கப்பிரிவு அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.  

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது.  அதானி குடும்பம் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்தக்கோரி பிரச்சனை எழுப்பியதால், பெரும்பாலான நாட்கள் அவைகள்  முடங்கியது.  விடுமுறைக்குப் பின்னர் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் இரண்டாவது  அமர்வு  தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதிலும் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றம்

அதேபோல்  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என  பாஜக எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர் முழக்கம் காரணமாக மீண்டும்  நாடாளுமன்ற இரு அவைகளும் பல முறை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. நேற்றைய தினம்  நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பே ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கியிருந்தார்.
 
இந்த நிலையில் அதானி விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. 18 எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளும் இந்த கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.   இதில் அமலாக்கத்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை மத்திய அரசு குறிவைப்பது குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.