கடும் சரிவில் அதானி குழும பங்குகள் மதிப்பு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.53,000 கோடி இழப்பு..
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதானி குழும நிறுவன பங்குகள் ஏழு சதவிகிதம் வரை சரிந்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் போலி நிறுவனங்களை உருவாக்கி பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து அறிக்கை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் அதானி குழுமம் முறைகேடு குறித்து நேற்று அறிக்கை வெளியிட்டது. இதில் அந்நிறுவனம் உருவாக்கிய போலி நிறுவனங்களில், செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பல ஆயிரக்கணக்கான பங்குகளை வைத்துள்ளார் என்றும், இதன் காரணமாகவே அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக செபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.
அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம், பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் கடுமையாக விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. பங்குகள் விலை சரிவால் அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.53,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகள் விலை 7 % சரிந்து ரூ.1,656க்கு வர்த்தகமாகி வருகிறது. அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்குகள் விலை 5% ஆகவும் , அதானி பவர் விலை 4 சதவிகிதமாகவும் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் அதானி வில்மர், அதானி எனர்ஜி சொல்யூஷன், அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 3% சதவீதம் வரை சரிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 424 புள்ளிகள் சரிந்து 79 ஆயிரத்து 281 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 213 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்தின் நிறுவன பங்குகள் பங்குச்சந்தையில் எதிரொலிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதன்படியே அதானி குடும்ப பங்குகளின் மதிப்பு ரூ.53 ஆயிரம் கோடி சரிந்துள்ளது. வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன