மோடியை எதிர்க்க நமக்கு உரிமை உண்டு ஆனால் நாட்டை எதிர்ப்பது சரியல்ல... காங்கிரஸின் ஆச்சார்யா கிருஷ்ணன்

 
ஆச்சார்யா கிருஷ்ணன்

மோடியை எதிர்க்க நமக்கு உரிமை உண்டு ஆனால் நாட்டை எதிர்ப்பது சரியல்ல என்று காங்கிரஸின் ஆச்சார்யா கிருஷ்ணன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறான கருத்தை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆச்சார்யா கிருஷ்ணன் கூறியதாவது:

புதிய நாடாளுமன்ற கட்டிடம்

இந்திய நாடாளுமன்றம் இந்திய பிரதமரால் திறக்கப்படவில்லை என்றால், அது பாகிஸ்தான் பிரதமரால் திறந்துவைக்கப்படுமா?. மோடியை எதிர்க்க நமக்கு உரிமை உண்டு ஆனால் நாட்டை எதிர்ப்பது சரியல்ல. எதிர்க்கட்சிகள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். பிரதமரின் நிலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பக் கூடாது, ஏனெனில் அவர் ஒரு கட்சிக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டுக்கும் பிரதமர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோடி

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம்  தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும்  தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா (யு.பி.டி.), திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற  கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக  அறிவித்தன.