"ஆபரேஷன் சிந்தூர்- 6 பாக் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன"
ஆப்ரேசன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் ஆறு விமானங்களை இந்தியா தாக்கி அழித்தது என விமானப்படை தளபதி விளக்கம் அளித்துள்ளார்.
ஆப்ரேசன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து விமானப்படை உயர் தரப்பில் முதல் முறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை தளபதி ஏ.பி.சிங், “ஆப்ரேசன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் ஆறு விமானங்களை இந்தியா தாக்கி அழித்தது. இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆறு போர் விமானங்களில் ஒன்று அதி நவீன கண்காணிப்பு விமானம். F-16 விமானங்களையும் அழித்தோம். பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு முழுவதும் அழிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் ஒரு AEW&CS விமானத்தையும் இந்தியா சுட்டு வீழ்த்தியது. இந்தியா ஆழமாக ஊடுருவி தாக்கியதால், பாகிஸ்தான் DGMO போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். ரஷ்யாவிடம் வாங்கிய எஸ்-400 அமைப்பு, போரில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய விமானப்படையின் எஸ் 400 மூலம் பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் நீண்ட காலமாக செயல்பட்ட 6 பயங்கரவாத முகாம்கள் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.” என்றார்.


