மோடி இந்தியாவின் பிரதமரா அல்லது அதானியின் பிரதமரா? என்பதை தேசம் அறிய விரும்புகிறது.. ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்

 
பிரதமர் மோடி

பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமரா அல்லது அதானியின் பிரதமரா? என்பதை தேசம் அறிய விரும்புகிறது என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில், சமாஜ்வாடி, தி.மு.க., ஆம் ஆத்தி, பி.ஆர்.எஸ். உள்ளிட்ட 17 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள், அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி அமலாக்கத்துறையிடம் மனு கொடுக்க நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். எதிர்க்கட்சிகளின் பேரணியை கருத்தில் கொண்டு விஜய் சவுக் மற்றும் அமலாக்கத்துறை அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் பாதுகாப்பு  போடப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பேரணி விஜய் சவுக்கை அடைந்தவுடன், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

சஞ்சய் சிங்

அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், அதானி விவகாரத்தை அமலாக்கத்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரிக்க தொடங்க வேண்டும். அதானி விவகாரம் ஏன் விசாரிக்கப்படவில்லை? பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமரா அல்லது அதானியின் பிரதமரா? என்பதை தேசம் அறிய விரும்புகிறது என தெரிவித்தார்.

ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில்,  அதானி விவகாரத்தை விசாரிக்க  நாடாளுமன்ற கூட்டுக் குழுவை (ஜே.பி.சி.) நாங்கள் கோரினோம். இருப்பினும் ஜே.பி.சியை பா.ஜ.க. விரும்பவில்லை. ஏனெனில் அது ஊழலை கொண்டு வந்து அவர்களின் (பா.ஜ.க.) உண்மையான முகத்தை அம்பலப்படுத்தும். அவர்கள் (பா.ஜ.க.) எதிர்க்கட்சியாக இருக்கும் வரை ஜே.பி.சி.யை விரும்பினர், இப்போது அவர்கள் பயப்படுகிறார்கள் என தெரிவித்தார்.