அரசியல் கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை.. ஆய்வில் 41 சதவீதம் பேர் ஆதரவு

 
தேர்தல்

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இம்மாதம் 15ம் தேதி வரை அரசியல் கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தற்கு 41 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட்,  பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும்  தேர்தல் நடத்தப்படும் தேதிகளை  தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதேசமயம், கோவிட் பரவலை கருத்தில் கொண்டு இம்மாதம் 15ம் தேதி வரை நேரடி பொதுகூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. அதன் பிறகு பரிசீலனை செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து தொடர்பாக டிஜிட்டல் சமூகம் சார்ந்த தளமான லோக்கல் சர்க்கிள்ஸ் மக்கள் மத்தியில் கருத்து கணிப்பு ஒன்றை மேற்கொண்டது.

தேர்தல் ஆணையம்

லோக்கல் சர்க்கிள்ஸ் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களை சேர்ந்த 4,172 பேரும் அடங்குவர். இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 41 சதவீதம் பேர் தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கூட்டங்களையும் தடை செய்ததற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட்,  பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில தேர்தலை ஒத்திவைப்பதற்கு 31 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

கொரோனா வைரஸ்

அனைத்து அரசியல் கூட்டங்களிலும் கோவிட் இணக்க விதிமுறைகள் விதிக்கப்படவேண்டும், ஆனால் அவை தொடர வேண்டும் என்று 24 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் காரணமாக கோவிட் பரவும் அபாயம் குறைவாக இருப்பதால் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று 4 சதவீதம் பதில் அளித்தள்ளனர்.