திருப்பதி கோயிலுக்கு செல்வோருக்கு கைத்தடி வழங்கும் திட்டம் தொடக்கம்

 
கைத்தடி

திருப்பதி நடைபாதையில் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு வனவிலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக கைத்தடி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 


திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக வேண்டுதலின்படி நடந்து செல்லும் பக்தர்கள் மீது வனவிலங்குகள் தாக்குதல் நடத்தினால் தற்காத்துக் கொள்வதற்காக  அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, செயல் அதிகாரி தர்மா ரெட்டி இணைந்து பக்தர்களுக்கு கைத்தடி  வழங்கினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாகர் ரெட்டி, “நடைபாதையில் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் மீது வனவிலங்குகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்காக மட்டுமே இந்த கைத்தடி வழங்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வனவிலங்குகளிடமிருந்து பக்தர்களை பாதுகாக்காமல் கைத்தடி வழங்கினால் இந்த பிரச்சனை தீர்ந்து விடுமா என சிலர் குறை சொல்லி வருகிறார்கள். பழங்காலம் முதல் தற்போது வரை கிராமங்களில் இப்பொழுதும்  வயல் வெளிகளுக்கு செல்பவர்கள் கையில் கைத்தடியை கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

Image

எனவே வனத்துறை அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின்படி, நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு மன தைரியத்தை வழங்கி வனவிலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக இந்த கைத்தடி வழங்கப்படுகிறது. அத்துடன் மட்டுமல்லாமல் தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்களும், போலீசாரும் நடைபாதை வழி முழுவதும் பக்தர்களுடன் துணை இருப்பார்கள். ஏற்கனவே கூண்டு வைத்து நான்கு சிறுத்தைகள் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு சிறுத்தை இருப்பதாக வனத்துறை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதனை பிடிப்பதற்கும் தொடர்ந்து கூண்டு வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.