மீசையை டிரிம் செய்ய மறுத்த மத்திய பிரதேச காவலர் சஸ்பெண்ட்..

 
ராகேஷ் ரானா

மத்திய பிரதேசத்தில் முடி மற்றும் மீசையை டிரிம் செய்ய மறுத்த காவலர் சஸ்பெண்ட் செய்ய நிகழ்வு வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச  காவல்துறையின் போக்குவரத்து பிரிவில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் காவலர் ராகேஷ் ரானா. இவர் கழுத்து பகுதி வரையிலான நீண்ட மீசையுடன் வலம் வந்துள்ளார். இதனையடுத்து மீசையை டிரிம் செய்யும்படி காவல்துறை அதிகாரி அவருக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் அவர் தனது மீசையை டிரிம் செய்யாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, ரானா தனது தோற்றம் குறித்து மூத்த அதிகாரியின் உத்தரவை பின்பற்றாததால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச போலீஸ்

ரானாவின் சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்த உதவி ஆய்வாளர்-ஜெனரல் பிரசாந்த் சர்மா கூறுகையில், ரானா தனது தோற்றம் குறித்து மூத்த அதிகாரியின் உத்தரவை பின்பற்றாததால் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது தோற்றத்தை பரிசோதித்தபோது, கான்ஸ்டபிள் முடி வளர்த்து கழுத்து வரை மீசையுடன் காணப்பட்டார். அது மோசமாக  இருந்ததால், முடியை கத்தரித்துக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் உத்தரவுகளை பின்பற்றவில்லை என்று தெரிவித்தார்.

ராகேஷ் ரானா

அதேசமயம், காவலர் ராகேஷ் ரானா இது சுயமரியாதை என்று கூறி மீசையை வெட்ட மறுத்து விட்டார். காவலர் ராகேஷ் ரானா கூறுகையில், நான் ஒரு ராஜபுத்திரன். என் மீசை என் பெருமை. இடைநீக்கம் செய்யப்பட்டாலும் எனது மீசை விஷயத்தில் சமரசம் செய்ய மாட்டேன் என்று தெரிவித்தார்.