யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல்.. சோனியா வீட்டில் போலீஸ் குவிப்பு..

 
சோனியா காந்தி

நேஷனல் ஹெரால்டு  வழக்கில்  சோனியா காந்தி, ராகுல் காந்திக்குச் சொந்தமான ‘யங் இந்தியா’நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை  அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

காங்கிரஸ்  கட்சி சார்பில் ஜவஹர்லால் நேரு காலத்தில் அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு,  நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை  நடத்திவந்தது.   இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுதந்திரப்போராட்ட வீரர்கள் பங்கு தாரர்களாக இருந்தனர்.  இந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ. 90 கோடி கடன் கொடுத்திருந்தது.  இதனை திருப்பிச் செலுத்தாத நிலையில்,  ஏற்பட்ட நஷ்டம் காரணமாக  இந்த பத்திரிகை  கடந்த 2008 ஆம் ஆண்டு  நிறுத்தப்பட்டது.
 பின்னர் இந்த நிறுவனத்தின் அசையா சொத்துக்களை சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு வெறும் ரூ. 50 லட்சத்திற்கு  மாற்றப்பட்டது.  ஆனால் இதற்கு  அசோசியேட்டட் ஜெனரல்ஸ் நிறுவன  ( ஏஜெஎல்)  பங்குதாரர்களின் ஒப்புதலை பெறவில்லை.

நேஷனல் ஹெரால்டு வழக்கு

இதனையடுத்து  ரூ. 2000 கோடி  மதிப்புள்ள சொத்துக்களை சோனியாவும், ராகுலும் சட்டவிரோதமாக அபகரித்துக்கொண்டதாக பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி,   டெல்லி  உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை தற்போது  அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.  இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,   ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி கடந்த ஜூன் மாதம் ராகுல்காந்தியிடம் 5 நாட்கள்  50 மணி நேரமும்,  கடந்த மாதம் ( ஜூலை)  சோனியா காந்தியிடம் 3 கட்டங்களாக 11 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

நேஷனல் ஹெரால்டு வழக்கு

இந்நிலையில் நேற்று  முன்தினம் திடீரென, டெல்லியில் உள்ள  நேஷனல் ஹெரால்டு அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில்  அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். சோதனை நிறைவு பெற்ற அடுத்த நாளான நேற்று, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் தலைமை அலுவலகமான ‘யங் இந்தியா’ அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.  அந்தக் கதவில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில், “அமலாக்கத்துறையின் முன் அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை யாரும் திறக்கக் கூடாது”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதால், யங் இந்தியா நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சோனியா காந்தி வீட்டின் முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்  காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள  பகுதியிலும்   144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,  கட்சி தலைவர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டதோடு,  அங்கும் தடுப்புகள் அமைத்து வழிகள் அடைக்கப்பட்டன. இந்த சம்பவம்,  அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது.