காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தவை அழிந்துவிட்டன - பிரதமர் மோடி பேச்சு..

 
Modi

 ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தவை இப்போது அழிந்துவிட்டது என   இமாச்சல் பிரதேச மாநில தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.  

இமாச்சல் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் 12ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அங்கு  நாளையுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது. இதனால் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும்   தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.  அந்தவகையில்  இமாச்சல் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் இன்று காலை பிரதமர் மோடி உரையாற்றினார்.  முன்னதாக ,  ஹெலிகாப்டர் மூலம் சுஜான்பூர் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மோடி

இதனை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியின்  துரோகத்தினாலும், வஞ்சகத்தினாலும்  இமாச்சல பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.   அதேசமயம், இமாச்சலப் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று அடிப்படை வசதிகளை ஏற்படுத்த பாஜக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றார். மேலும், காங்கிரஸ் கட்சியின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது என்றும்,  ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட பகுதிகள் இப்போது முற்றிலும் அழிந்து விட்டது என்றும்,  அதற்கான காரணம் பொய்யான வாக்குறுதிகள் மற்றும் பொய்யான உத்தரவாதங்கள் என்று  பிரதமர் மோடி பேசினார்.