திரௌபதி முர்முவா ? யஷ்வந்த் சின்ஹாவா ? - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

 
president election

நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.  

இந்தியாவின்  15வது குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  இதனையடுத்து 16வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது. தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும்  , எதிர்க்கட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தபடி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  கடந்த திங்கள் கிழமை நாடாளுமன்ற வளாகம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளில் நடைபெற்றது.  காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 771 பேரும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,025 பேரும் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இதில், ஒட்டுமொத்தமாக 99 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 சட்டப்பேரவைகளில் நடைபெற்ற வாக்குப்பதிவுகளில் 100 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் விமானம் மூலம் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. 

rajya sabha

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன் நிலவரத்தை தோ்தல் அலுவலா் பி.சி.மோடி அறிவிப்பார். பின்னா், அகரவரிசைப்படி முதல் 10 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் முடிவையும் அவா் அறிவிப்பார். அதன்பின்னா், அடுத்த 20 மாநிலங்களின் நிலவரம் அறிவிக்கப்பட்டு இறுதியாக தோ்தல் முடிவு வெளியிடப்படும்.  பெரும்பாலான ஆதரவுகள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கே இருப்பதாக தகவலகள் தெரிவிப்பதால், அவரே அடுத்த குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசு தலைவர் என்ற பெருமையை திரௌபதி முர்மு படைப்பார்.