அரைநிர்வாண பெண்களுடன் சித்ரகுப்தர்.. அஜய் தேவ்கன் படத்தை தடை செய்யுங்க.. மத்திய அமைச்சருக்கு பா.ஜ.க. அமைச்சர் கடிதம்

 
தேங் காட் பட ஸ்டில்

அரைநிர்வாண பெண்களுடன் சித்ரகுப்தர் இருப்பது போல் எடுக்கப்பட்டுள்ள அஜய் தேவ்கன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி வரும் படம் தேங்க் காட். இந்த படம் இந்து புராணத்தை சார்ந்த கதை என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் மத்திய பிரதேச கல்வி துறை  அமைச்சர் விஸ்வாஸ் சாரங் வலியுறுத்தியுள்ளார். மரணத்தின் கடவுளான யமனுடன்  வரும் சித்ரகுப்தா என்ற இந்து கடவுளை படம் பொருத்தமற்ற முறையில் சித்தரிக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விஸ்வாஸ் சாரங்

இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு மத்திய பிரதேச கல்வி துறை  அமைச்சர் விஸ்வாஸ் சாரங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த பல ஆண்டுகளாக பாலிவுட்டில் பல தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் இந்து சமுதாயத்தின் தெய்வங்கள் குறித்து ஆபாசமான காட்சிகள் உள்பட ஆட்சேபனைக்கரிய கருத்துக்களை கூறி வருகின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரெய்லரில், சித்ரகுப்தாவை அரை நிர்வாண பெண்களால் சூழப்பட்ட ஒருவராக காட்டப்படுகிறார்.

அனுராக் தாக்கூர்

மேலும் அவர் சார்பாக தேவ்கன் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார். படத்தின் ஹீரோ அஜய்  தேவ்கனின் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களால் காயஸ்த சமூகத்துடன் ஒட்டு மொத்த இந்து சமூகத்திலும் நிறைய கோபம் உள்ளது. இந்த திரைப்படத்தின ஒளிபரப்பை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்துவதன் மூலம் ஒட்டு மொத்த காயஸ்த மற்றும் இந்து சமுதாயத்தினரின் உணர்வுகள் புண்படுத்தப்படுவதை தயவு செய்து தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.