சாதாரண ரயிலுக்கு வந்தே பாரத் ரயில் என பெயர் மாற்றி அதிவேக ரயிலின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. மேற்கு வங்க அமைச்சர்

 
வந்தே பாரத் ரெயில்

சாதாரண ரயிலுக்கு வந்தே பாரத் ரயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிவேக ரயிலின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில்  ஹௌரா-நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் தொடர்ந்து 2 தினங்கள் வந்தே பாரத் ரயில் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 3ம் தேதியன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீசியது தொடர்பாக பீகார் காவல் துறை 3 சிறார்களை கைது செய்தது.

துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக நிரூபித்தால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன்.. மம்தா பானர்ஜி சவால்

வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு சம்பவம் நடந்தது பீகாரில், மேற்கு வங்கத்தில் அல்ல. பீகார் மக்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை விரும்புவதால் கோபமாக இருக்கலாம். அங்கு பா.ஜ.க. ஆட்சியில் இல்லை என்பதற்காக, அவர்கள் அங்கு அனுமதிக்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் சிறப்பு எதுவும் இல்லை, இது புதிய என்ஜினுடன் புதுப்பிக்கப்பட்ட பழைய ரயில் என தெரிவித்தார்.

உதயன் குஹா

இந்நிலையில், ரயில் பயண டிக்கெட்டுக்கு அதிக விலை நிர்ணயித்ததால் தான் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடந்துள்ளது என்று மேற்கு வங்க அமைச்சர் ஒருவர் புது தகவலை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா கூறியதாவது: சாதாரண ரயிலுக்கு வந்தே பாரத் ரயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிவேக ரயிலின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிவேக ரயிலாக இருந்தால், ஹவுராவிலிருந்து நியு ஜல்பைகுரிக்கு செல்ல ஏன் எட்டு மணி நேரமாகிறது. சாதாரண ரயிலுக்கு வந்தே பாரத் என வர்ணம பூசுவதற்கு மக்களின் பணத்தை பயன்படுத்த வேண்டாம். ரயில் பயண டிக்கெட்டுகளுக்கு அதிக விலை நிர்ணயித்ததால் தான் இந்த தாக்குதல் நடந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.