திருப்பதியில் இனி பக்தர்கள் காத்திருக்க வேண்டாம்; டிசம்பர் முதல் புதிய விதிமுறை அமல்

 
tirupati

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு டிக்கெட் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் வழங்கப்படும் என அரங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tirupati - Wikipedia

திருப்பதி அலிபிரியில் தேவஸ்தான பணியாளர்களின் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இருசக்கர வாகன பார்க்கிங் மையத்தை அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி இன்று காலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய சுப்பா ரெட்டி, “ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து தேவஸ்தான பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து சேவை செய்து வருகின்றனர். அவ்வாறு சேவை செய்யக்கூடிய  ஊழியர்கள் திருப்பதியில் குடியிருப்புகளை கொண்டவர்கள். இதில் அதிக அளவு ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்து திருப்பதி அலிபிரி அருகே வந்து தங்களது இருசக்கர வாகனங்களை வைத்துவிட்டு திருமலைக்கு பணிக்கு செல்கின்றனர். அவ்வாறு பணிக்கு  சென்று முடித்துக் கொண்டு திரும்ப வரும்போது இருசக்கர வாகனம் அல்லது பெட்ரோல் திருடப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். 

இதனை அடுத்து ₹ 54 லட்சம் செலவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக தற்பொழுது ஆயிரம்  இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் விதமாக பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பணியாளர்கள்  இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு அரசு பேருந்தில் பாதுகாப்பாக சென்று வர முடியும். மேலும் திருமலையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் 10 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் அதன் எண்ணிக்கை படிப்படியாக  உயர்த்தப்பட உள்ளது. 

இதேபோன்று திருமலையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் எலக்ட்ரிக் இ பைக் வாகனங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 100  இ -பைக் வழங்க நன்கொடையாளர்களும் முன்வந்துள்ளனர். விரைவில் அந்த பைக்குகள் பணியாளர்களுக்கு வழங்கப்படும். இதேபோன்று தேவஸ்தான பணியாளர்களில்  இ பைக் பெற முன் வந்தால் அவர்களுக்கு உரிய மானியத்துடன் இருசக்கர வாகனங்களை வாங்கி தர நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே தெரிவித்தபடி புரட்டாசி மாதம் முடிந்த பிறகு இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கப்பட உள்ளது. இதன் எண்ணிக்கை படிப்படியாக  உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் நேரடியாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு வைகுண்டம் காத்திருப்பு அறையில் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்து வைக்கப்படும். மேலும் விஐபி தரிசனத்தின் நேரத்தை மாற்றுவதற்காக அறங்காவலர் குழு முடிவு செய்துள்ள நிலையில் தேவஸ்தான அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்த கருத்தின் படி கல்யாண உற்சவம் பக்தர்களுக்கும் காலை 10 மணிக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதால் காலை 10 மணி முதல் 12 மணி வரை என்பதை காலை 8 மணி முதல் 8.30 மணிக்கு தொடங்கி விஐபி தரிசனத்தில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதாவது திருப்பதியில் வழக்கமாக இரவு 12 மணிக்கு நடை சாத்தப்படும். அப்போது வரிசையில் நிற்பவர்கள் அடுத்த நாள் காலை 10 மணி வரை நிற்க வேண்டும்.. இதற்கு தீர்வு காண காலை 6 மணிக்கு இருக்கும் விஐபி தரிசன நேரத்தை மாற்றிவிட்டு பக்தர்களை அந்த நேரத்தில் தரிசிக்க அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை டிசம்பர் முதல் செயல்பாட்டுக்கு வரும்” என தெரிவித்தார்.