நடிகை உர்பி ஜாவேத் முஸ்லிம் என்பதால் பா.ஜ.க.வால் குறிவைக்கப்படுகிறார்.. திருப்தி தேசாய் குற்றச்சாட்டு

 
உர்பி ஜாவேத்

நடிகை உர்பி ஜாவேத் முஸ்லிம் என்பதால் பா.ஜ.க.வால் குறிவைக்கப்படுகிறார் என்று ஆர்வலரான திருப்தி தேசாய் குற்றம் சாட்டினார்.

இந்தி பிக்பாஸ் புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக மிகவும் பிரபலமானவர். அதேசமயம் அவர் பேஷன் என்று அணியும் ஆடைகள் சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இருப்பினும் உர்பி ஜாவேத் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தான் நினைத்தப்படி மற்றும் தனது விருப்பப்படி தொடர்ந்து ஆடைகளை அணிந்து வருகிறார். இந்நிலையில் மகாராஷ்டிரா பா.ஜ.க.வின் மகளிர் பிரிவு தலைவர் சித்ரா வாக், இது சத்ரபதி சிவாஜி மகாராஜின் நிலம், மகாராஷ்டிராவின் கலாச்சாரம் உர்பி ஜாவேத் மூலம் நிர்வாணத்தை காட்ட அனுமதிப்பதில்லை. உர்பி ஜாவேத்துக்கு எதிராக மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

பா.ஜ.க.

மேலும், பொதுவெளியில் நிர்வாணத்தில் ஈடுபடுகிறார் என்று உர்பி ஜாவேத்துக்கு எதிராக காவல் நிலையத்தில் சித்ரா வாக் புகார் கொடுத்து இருந்தார். இந்த சூழ்நிலையில், சித்ரா வாக்கை, உர்பி ஜாவேத் டிவிட்டரில் மறைமுகமாக தாக்கியுள்ளார். உர்பி ஜாவேத் டிவிட்டரில், சிலைகளில் செதுக்கப்பட்ட பழங்கால இந்து பெண்களின்  படங்களை பதிவேற்றம் செய்து, பழங்கால இந்து பெண்கள் இப்படித்தான் ஆடை அணிந்தனர். இந்துக்கள் தாராளவாதிகள், படித்தவர்கள், பெண்கள் தங்கள் ஆடைகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டனர். விளையாட்டு, அரசியலில் தீவிரமாக பங்கு கொண்டனர். அவர்கள் செக்ஸ் மற்றும் பெண்களின் உடல் நேர்மறையான மனிதர்கள். முதலில் பாரதிய சமஸ்கிருதியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என பதிவு செய்து இருந்தார்.

திருப்தி தேசாய்

இந்நிலையில், நடிகை உர்பி ஜாவேத்துக்கு ஆதரவாக ஆர்வலர் திருப்தி தேசாய் குரல் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக திருப்தி தேசாய் கூறியதாவது: நமது நாடு அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் இயங்குகிறது. நாம் விரும்புவதை அணிந்து கொள்ளும் சுதந்திரம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. உர்பி ஜாவேத் மீது நிறைய புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் ஒரு தைரியமான நடிகை. அவர் மட்டுமல்ல, கங்கனா ரனாவத், மல்லிகா ஷெராவத் மற்றும் தீபிகா போன்ற நடிகைகளும் தைரியமானவர்கள். இருப்பினும் அவர்கள் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை. ஒருவர் புகார் அளிக்க விரும்பினால், அது இந்த நடிகைகள் அனைவருக்கும் எதிராகவும் இருக்க வேண்டும். உர்பி ஜாவேத் முஸ்லிம் என்பதால் பா.ஜ.க.வால் குறிவைக்கப்படுகிறார். கேதகி சித்தாலே வழக்கில் நடந்தது போல் இப்போது அவள் காவல் நிலையத்திற்கு அழைக்கப்படுவாள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.