பசுக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உலகம் நன்றாக இருக்கும்! பசுக்களை துன்புறுத்தினால் சொத்துக்கள் அழிந்துவிடும்! - சலசலப்பை ஏற்படுத்திய தீர்ப்பு

 
c

பசுக்களை துன்பப்படுத்துவதை நிறுத்தி விட்டால் உலகில் பிரச்சனைகள் தீர்ந்து செழிப்பாக இருக்கும்.  பசுக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உலகம் மகிழ்ச்சியாக இருக்கும்.   ஒருவர் பசுவை துன்புறுத்தினால் அவரது சொத்துக்கள் முழுவதும் அழிந்து போய்விடும் என்று தீர்ப்பளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் குஜராத் தபி மாவட்ட நீதிபதி.   இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது .

 மத்தியில் பாஜக ஆட்சி வந்தது முதல் இறைச்சிக்காக மாடுகளை  குறிப்பாக பசுக்களை கொல்ல கூடாது என்கிற வாதங்கள் வலுத்து வருகின்றன.  பசுக்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடங்களுக்கு அழைத்துச் செல்பவரை பசு கடத்தல் காரர்கள் என்று சொல்லி அவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் தொடர்கின்றன.

உத்தரப்பிரதேசம்,  கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடையும்  விதிக்கப்பட்டிருக்கிறது.

t

 இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் இருந்து 16 பசு மாடுகளை கடத்தி வந்ததாக சொல்லி முகமது அமீன் என்பவரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.   இது குறித்த வழக்கு தபி மாவட்ட நீதிமன்றத்தில்  நடந்து வந்திருக்கிறது.

 விசாரணைகள் முடிந்து நீதிபதி வினோத் சந்திரா வியாஸ் தீர்ப்பளித்து இருக்கிறார்.   அந்த தீர்ப்பில் முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறார்.   தீர்ப்பின் போது நீதிபதி சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். 

அதாவது,    உலகத்திற்கே பசு முக்கியமானது.  அப்படிப்பட்ட பசுவின் ரத்தம் பூமியில் சிந்தக்கூடாது.  பசுவின் ரத்தம் பூமியில் என்றைக்கு சிந்தாமல் இருக்கிறதோ அன்றைக்கு தான் இந்த உலகம் செழிப்பாக இருக்கும்.   நம் தாயைப் போன்றது பசு.  உலகில் வேறு எந்த ஜீவராசிக்கும் பசுவை போல நன்றி உணர்வு  கிடையாது. அப்படிப்பட்ட நன்றி உணர்வு கொண்ட பசுக்களுக்கு நாம் மிகவும் மதிப்பளிக்க வேண்டும் .

பெரும்பாலான மக்கள் பசுவை ஒரு மதம் சார்ந்த விஷயமாகவே பார்க்கிறார்கள்.  அது தவறு.  பொருளாதார ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பசுக்கள் பலன்களுக்கு உரியவை.   பசுவின் சாணத்தால் கட்டப்படும்  வீடுகள் அணுக்கதிர்வீச்சு ஏற்பட்டால் கூட பாதிப்பு இருக்காது.

 ஒருவர் பசுவை துன்புறுத்தினால் அவரது சொத்துக்கள் அனைத்தும் அழிந்து போய்விடும் .  உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நீதிபதியின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது .