நாயை காரில் கட்டி இழுத்துச்சென்ற மருத்துவர்.. வைரலாகும் பதைக்க வைக்கும் வீடியோ..

 
நாயை காரில் கட்டி இழுத்துச்சென்ற மருத்துவர்.. வைரலாகும் பதைக்க வைக்கும் வீடியோ..

ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர்,  தனது காரில் தெரு நாயை கட்டி இழுத்துச் சென்றுள்ளார் . இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த  மருத்துவர் ஒருவர்,  தனது வீட்டின் அருகில் இருந்த தெருநாய் ஒன்றை  தனது காரில் கட்டி சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.  அந்த மருத்துவர் காரை ஓட்டிச்செல்லும் வேகத்திற்கு , நீண்ட கயிற்றால் கட்டப்பட்டிருந்த அந்த நாய் , சாலையில் அங்கும் இங்குமாக  காரின் பின்னாலேயே  ஓடி வந்துள்ளது. அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற சிலர் இதனைப்பார்த்து  அதிர்ச்சியடைந்தனர்.  பின்னர்  அந்த காரை வழிமறித்து நிறுத்தி,  கட்டப்பட்டிருந்த நாயே அவிழ்த்து விட்டுள்ளனர். அதன்பிறகு காயங்களுடன் இருந்த அந்த நாயை ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றி  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

street Dogs

பின்னர் அங்கிருந்த ரஜ்னீஷ் கால்வா என்பவர் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்திருக்கிறார்.  இதனையடுத்து டாக் ஹோம் அறக்கட்டளை கொடுத்த புகாரின் பேரில்,   நாயை  காரில் கட்டி இழுத்துச் சென்ற மருத்துவர் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  பின்னர் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது  தனது வீட்டின் அருகே தெருநாய் வசித்து வந்ததாகவும்,  அதனை அப்புறப்படுத்துவதற்காக அவ்வாறு செய்ததாகவும்  அந்த மருத்துவர் கூறி இருக்கிறார்.