அக்னிபாத் திட்டம் பேரழிவு தரும்.. அக்னிபாத் திட்டதுக்கு எதிராக இன்று முதல் நாடு தழுவிய பிரச்சாரம்.. விவசாய அமைப்பு அறிவிப்பு

 
அக்னிபாத் திட்டம்

அக்னிபாத் திட்டம் பேரழிவு தரும் என்றும், இந்த திட்டத்துக்கு எதிராக இன்று முதல் நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.

மத்திய அரசு அண்மையில் முப்படைகளில் இளைஞர்கள் சேர ஏதுவாக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில்  பணிபுரியலாம். அதன்பிறகு சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள் பணியில்  இருந்து விடுவிக்கப்படுவர். மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு ஒரு சாரர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் அண்மையில் நாடு முழுவதுமாக பல நகரங்களில்  இந்திய விமான படைக்கான அக்னிபாத் ஆட்சேர்ப்பு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் தலைமை அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரத்தை இன்று தொடங்க உள்ளது.

யோகேந்திர யாதவ்

இது தொடர்பாக சுவராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரச்சாரத்தின் முதல் படியாக இன்று முதல் 14ம் தேதி வரை ஜெய் ஜவான் ஜெய் கிசான் மாநாடு நடைபெறும்.  இந்த பிரச்சாரமானது சர்ச்சைக்குரிய அக்னிபாத் திட்டத்தின் பேரழிவு விளைவுகளை பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டுவதையும், ஜனநாயக, அமைதியான மற்றும் அரசியலமைப்பு வழிகளை பயன்படுத்தி அதை திரும்ப பெற மத்திய அரசை கட்டாயப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. வேளாண் சட்டங்கள் மோசமாக இருந்தால், அக்னிபாத் திட்டம் பேரழிவு தரும். நமது விவசாயிகளும், ராணுவ வீரர்களும் துயரத்தில் உள்ளதால், நமது நாட்டின் முதுகெலும்பு உடைந்து விடும் அபாயம் உள்ளது. 

ராணுவ வீரர்கள்

தேசத்தின் பாதுகாவலர்கள் மற்றும் உணவளிப்பவர்களை அரசு புல்டோசர் செய்து அழித்து விடுவதற்கு நமது மௌனம் காரணமாக இருக்க முடியாது. நாம் ஒருமுறை தடுத்து விட்டோம், மீண்டும் தடுக்க முடியும். இந்த பிரச்சாரத்தின்கீழ் சில முக்கிய நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை ஹரியானாவின் ஜிந்த் மாவட்டம், உத்தர பிரதேசத்தின் மதுரா, மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் நடைபெறும். ஆகஸ்ட் 9ம் தேதியன்று ரேவாரி, முசாபர்நகர் ஆகிய இடங்களிலும், ஆகஸ்ட் 10ம் தேதியன்று இந்தூர் மற்றும் மீரட் ஆகிய பகுதிகளிலும், ஆகஸ்ட் 11ம் தேதியன்று பாட்னாவிலும் நிகழ்வுகள் நடைபெறும். அக்னிபாத் திட்டத்தை திரும்பபெற வேண்டும், முந்தைய வழக்கமான மற்றும் நிரந்திர ஆட்சேர்ப்பு முறையை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.