தேசத்தின் தந்தை, தேசத்தின் ரிஷி... ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை புகழ்ந்த இமாம் அமைப்பின் தலைவர்

 
உமர் அகமது இல்யாசி

தேசத்தின் தந்தை, தேசத்தின் ரிஷி என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாசி புகழ்ந்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த நிர்வாகிகள் நேற்று அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாசியை புதுடெல்லியில் உள்ள மசூதியில் சந்தித்தனர்.  கஸ்தூரிபா காந்தி மார்க்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. இந்த  சந்திப்பு தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர், இமாம் தலைவர் சந்திப்பு நடந்த பகுதி

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடான சந்திப்பு குறித்து உமர் அகமது இல்யாசி கூறுகையில், இன்று (நேற்று) எனது அழைப்பின் பேரில் மோகன் பகவத் வருகை தந்தார்.  அவர் தேச தந்தை மற்றும் தேச குரு. அவரது வருகையிலிருந்து ஒரு நல்ல செய்தி வெளிவரும். நாம் கடவுளை வழிபடும் முறைகள் வேறுபட்டாலும்  மனிதநேயமே பெரிய மதம். நாடு முதலில் வரும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.

மோகன் பகவத்

அகமது இல்யாசியின் சகோதரர் சுஹைப் இல்யாசி கூறுகையில், எங்கள் தந்தையின் நினைவு நாள் அழைப்பின் பேரில் மோகன் பகவத்ஜி வந்தது நாட்டிற்கு ஒரு நல்ல செய்தியை அனுப்புகிறது என தெரிவித்தார். மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியில் மோகன் பகவத் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் அறிவுஜீவிகள் மற்றும் அறிஞர்களுடன் கலந்துரையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.