மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த என்னை போல் சிங்கிளா இருங்க.. டிவிட்டரில் கலக்கிய பா.ஜ.க. அமைச்சர்

 
டெம்ஜென் இம்னோ அலோங்

மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த என்னை போல் சிங்கிளா இருங்க என்று நாகலாந்து பா.ஜ.க. அமைச்சர் போட்ட டிவிட் டிவிட்டர்வாசிகளை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.
      
நாகலாந்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்மாநில உயர் கல்வி மற்றும் பழங்குடியினர் விவகார துறை அமைச்சருமான டெம்ஜென் இம்னோ அலோங் எந்தவொரு விஷயத்தையும் நகைச்சுவை உணர்வோடு எளிதாக மற்றவர்களுக்கு புரியும்படி கடத்தி விடுவார். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு டெம்ஜென் இம்னோ அலோங், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு என்னை போல் சிங்கிளாக இருங்க என்று டிவிட்டரில் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

உலக மக்கள் தொகை தினம்
 
நாகலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னோ அலோங்  டிவிட்டரில், உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, மக்கள் தொகை பெருக்கத்தின் பிரச்சினைகளில் விழிப்புணர்வோடு இருப்போம் மற்றும் குழந்தைப்பேறில் குறித்து தகவலறிந்த (குடும்ப கட்டுப்பாட்டு) தேர்வுகளை புகுத்துவோம். அல்லது என்னை போல் சிங்கிளா (தனிமை) இருங்கள் மற்றும் ஒன்றாக நாம் ஒரு நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க முடியும். இன்றே ஒற்றையர் இயக்கத்தில் சேருங்கள் என பதிவு செய்துள்ளார்.

வடகிழக்கு மாநில மக்கள்

கடந்த சில தினங்களுக்கு முன் வடகிழக்கு மாநில மக்களின் கண்கள் சிறிதாக இருப்பது குறித்து டெம்ஜென் இம்னோ அலோங் பேசிய வீடியோ மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவில் டெம்ஜென் இம்னோ அலோங், வட கிழக்கு மக்கள் சிறிய கண்கள் கொண்டவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் பார்வை கூர்மையானது. சிறிய கண்களால் இருப்பதால் கண்களுக்குள் அதிக அழுக்கு படிவதில்லை. மேலும், சில நீண்ட நிகழ்ச்சிகள் நடக்கும் போது நாம் எளிதாக தூங்க முடியும் என நகைச்சுவையாக பேசி இருந்தார்.