கண்கள் சிறிதாக இருப்பதால் நீண்ட நிகழ்ச்சிகள் நடக்கும் போது நாம் எளிதாக தூங்க முடியும்.. பா.ஜ.க. அமைச்சர்
கண்கள் சிறிதாக இருப்பதால் நீண்ட நிகழ்ச்சிகள் நடக்கும் போது நாம் எளிதாக தூங்க முடியும் என்று நாகலாந்தின் பா.ஜ.க. அமைச்சர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பொதுவாக வட கிழக்கு மாநில மக்களின் கண்கள் சிறிதாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பேசி வருவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாகலாந்தின் உயர் கல்வி மற்றும் பழங்குடியினர் விவகார துறை அமைச்சருமான டெம்ஜென் இம்னோ அலோங் நிகழ்ச்சி ஒன்றில் சிறிய கண்களின் நன்மைகளை பட்டியலிட்டு பேசிய ருசிகரமான பேச்சு அடங்கிய வீடியோ ஒன்று தற்போது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பார்வையாளர்களின் கைத்தட்டல்களுக்கு மத்தியில் டெம்ஜென் இம்னோ அலோங் பேசியிருப்பதாவது: வட கிழக்கு மக்கள் சிறிய கண்கள் கொண்டவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் பார்வை கூர்மையானது. சிறிய கண்களால் இருப்பதால் கண்களுக்குள் அதிக அழுக்கு படிவதில்லை. மேலும், சில நீண்ட நிகழ்ச்சிகள் நடக்கும் போது நாம் எளிதாக தூங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா டிவிட்டரில், எனது சகோதரர் டெம்ஜென் இம்னோ அலோங் புல் பார்மில் இருக்கிறார் என தலைப்பிட்டு, அவர் பேசிய வீடியோ பதிவேற்றம் செய்து இருந்தார். அசாம் முதல்வர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் டெம்ஜென் இம்னோ அலோங் பேசிய வீடியோ ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.


