ஒரு கோடி பெண்களுக்கு பதுகம்மா சேலைகள் இன்று முதல் விநியோகம்.. தெலங்கானா அமைச்சர் கே.டி.ராம ராவ்

 
சேலைகள்

தெலங்கானாவில் ஒரு கோடி பெண்களுக்கு பதுகம்மா சேலைகள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது என்று அம்மாநில் ஜவுளி மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் கே.டி.ராம ராவ் தெரிவித்தார்.

தெலங்கானாவில் ஆண்டு தோறும் நவராத்திரி பண்டிகை காலத்தில் பதுகம்மா என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது பிறந்த வீட்டுக்கு வரும் பெண்களுக்கான பண்டிகை என கூறப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, திருமணமாகி சென்ற பெண்கள் தங்கள் தாய் வீட்டுக்கு வருவார்கள். அவர்களுக்கு புடவை போன்ற சீர்வரிசைகள் வழங்கப்படுவது வாடிக்கை. முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு 2017ம் ஆண்டு முதல் பதுகம்மா பண்டிகையின்போது, அம்மாநில பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கி வருகிறது.

கே.டி.ராம ராவ்

அந்த வகையில், தெலங்கானா அரசு இந்த ஆண்டு பதுகம்மா சேலைகள்  வழங்கும் திட்டத்தை இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக அம்மாநில ஜவுளி மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் கூறியதாவது: மாநிலத்தில் பெண்களுக்கு பதுகம்மா சேலைகள் வழங்கும் விழா நாளை (இன்று) தொடங்குகிறது. நெசவாளர்களை ஆதரிப்பதற்கும், பெண்களுக்கு ஒரு சிறிய பரிசு வழங்குவதற்கும் ஒரு உன்னதமான இரட்டை இலக்குடன் 2017ம் ஆண்டில் மாநில அரசு இந்த முயற்சியை தொடங்கியது.

சேலைகளை தயாரிப்பில் நெசவாளர்கள்

நெருக்கடியில் உள்ள நெசவாளர்களுக்கு இந்த திட்டம் மிகவும் தேவையான உறுதியை அளித்தது. அவர்களின் வருமானம் இரட்டிப்பாகி, அவர்கள் தன்னிறைவு அடைய உதவியது. பெண்களுக்கு மகிழ்ச்சியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், பதுகமம்மா சேலைகள் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.