ஒரு பெண் கவர்னர் எப்படி பாரபட்சமாக நடத்தப்பட்டார் என்று மாநில சரித்திரம் எழுதும்... கே.சி.ஆர். அரசாங்கத்தை தாக்கிய தமிழிசை

 
தமிழிசை

ஒரு பெண் கவர்னர் எப்படி பாரபட்சமாக நடத்தப்பட்டார் என்று தெலங்கானா மாநிலம் சரித்திரம் எழுதும் என்று முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசை அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கினார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தெலங்கானா மக்கள் சேவையில் நான்காம் ஆண்டு தொடக்கம் நிகழ்ச்சியில் அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில்  பேசுகையில் கூறியதாவது: ஒரு பெண் கவர்னர் எப்படி பாரபட்சமாக நடத்தப்பட்டார் என்று தெலங்கானா மாநிலம் சரித்திரம் எழுதும். குடியரசு தினத்தன்று கவர்னர் உரை மற்றும் கொடியேற்ற எனக்கு மறுக்கப்பட்டது. இப்போதும் நான் எங்கு சென்றாலும் நெறிமுறை பின்பற்றப்படவில்லை. கவர்னர் அலுவலகம் மதிக்கப்படவேண்டும். அண்மையில் தென் மண்டல கூட்டம் நடந்தது. புதுச்சேரி துணை நிலை கவர்னராக கலந்து கொண்டேன். அந்த கூட்டத்தில் 75 சதவீத பிரச்சினைகள் தெலங்கானா, ஆந்திராவை சேர்ந்தவை. 

கே.சந்திரசேகர் ராவ்

அப்போது அனைத்து முதல்வர்களும் அங்கு இருந்தபோது, முதல்வர் (கே.சந்திரசேகர் ராவ்) ஏன் கலந்து கொள்ளவில்லை? பிரச்சினையை தீர்க்க உள்துறை அமைச்சர் இருக்கும்போது உங்களுக்கு (கே.சந்திரசேகர் ராவ்) என்ன பிரச்சினை?. உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் ஏன் பயன்படுத்தவில்லை? அதனால் மத்திய அரசுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அரசு மருத்துவமனை இயக்குனர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசியல்வாதிகள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்கள் வேலைகளை செய்கிறார்கள் என்றால், ஒவ்வொரு பொதுப் பிரதிநிதியும் அணுகக்கூடியவராக இருந்தால், மக்கள் ஏன் தங்கள் கவலைகளுடன் என்னிடம் ஏன் வருகிறார்கள்?.

ராஜ் பவன்

நான் மாவட்டங்களுக்கு செல்லும்போது, எஸ்.பி., கலெக்டர்கள் வந்து நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. யாரிடம் இருந்து அறிவுறுத்தல்களை பெற்றுக் கொண்டு அவர்கள் வரவில்லை என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் வரவில்லை என்றால் எனக்கு கவலையில்லை. நான் சில பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளேன். ஆனால் அவர்கள் அதை எடுத்துக்கொள்கிறார்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. கவர்னரை அங்கும் இங்கும் செல்ல முடியாது என்று சொல்கிறார்கள். ஆனால் கவர்னருக்கு எல்லையே இல்லை. எனது நோக்கம் மக்களுக்கு உதவுவது மட்டுமே, எல்லாமே மக்கள் சேவைக்காகவே. நான் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் கலந்து கொள்ளாதபோது அவர்களின் அலுவலகமாவது எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். முறையான நெறிமுறையை பின்பற்ற வேண்டும். ஏனெனில் தெலங்கானா வரலாற்றில் எழுதப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.