2ம் வகுப்பு மாணவன் மீது வெந்நீரை ஊற்றிய ஆசிரியர் - தொடரும் கொடூரம்

இரண்டாம் வகுப்பு மாணவன் மீது வெந்நீரை ஊற்றியிருக்கிறார் ஆசிரியர். ஆடையில் மலம் கழித்துவிட்டதால் ஆத்திரத்தில் ஆசியர் செய்த இந்த செயலால் அந்த 7 வயது சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கர்நாடக மாநிலத்தில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் சந்தேகல்லூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது அந்த தொடக்கப்பள்ளி. ஞான மாதேஸ்வர கிரமீனா சமஸ்தேக்கு சொந்தமான அந்த தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த ஏழு வயது சிறுவன் ஆடையிலேயே மலம் கழித்து இருக்கிறான். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ஹூலிகெப்பா அந்த 7 வயது மாணவன் மீது கொதிக்கும் தண்ணீரை எடுத்து ஊற்றி இருக்கிறார். இதில் சிறுவன் உடல் வந்து அலறி துடித்திருக்கிறான்.
பின்னர் சிறுவனை லிங்கா சகுரு தாலுகா மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அங்கு 40% காயங்களுடன் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தற்போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது .
சம்பவம் குறித்து விசாரணை போலீசார், இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை. அதனால் வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனாலும் எங்களுடைய போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர். இது பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வருகிறது . அங்கிருந்துதான் எங்களுக்கு புகார் வரவேண்டும். இதுவரைக்கும் புகார்கள் வரவில்லை என்று சொல்கின்றார்கள்.
ஆனால் செய்தி நிறுவனங்கள் விசாரித்த வரையிலும், பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் குடும்பத்தாரை உள்ளூர் தலைவர்கள் பள்ளிக்கு எதிராக புகார் கொடுக்கக் கூடாது என்று மிரட்டி வருவதால் அவர்கள் புகார் கொடுக்காமல் இருக்கின்றனர் என்று தெரிய வருகிறது.
அண்மையில் கர்நாடக மாநிலத்தில் துமக்கூர் நகரில் இருக்கும் ஒரு அங்கன்வாடி மையத்தில் 3 வயது சிறுவன் ஆடையில் மலம் கழித்ததற்காக அந்த சிறுவனின் பிறப்பு உறுப்பில் ஆசிரியை சூடு வைத்த சம்பவம் அதிர வைத்தது. இந்நிலையில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவன் ஆடையில் மலம் கழித்ததால் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி இருக்கிறார் ஆசிரியர்.