மழைநீரில் கால்படாமல் நடந்த ஆசிரியை - ஆப்பு வைத்த வீடியோ

 
up

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், பள்ளியை சூழ்ந்த மழைநீரில் தனது கால் நனைய கூடாது என்பதற்காக பள்ளி மாணவர்களை அந்த தண்ணீரில் நாற்காலிகளை போட வைத்து அதன் மீது ஏறி சென்ற ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக அங்குள்ள பள்ளி வளாகத்தை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், அந்த பள்ளிக்கு பணிக்கு வந்த ஆசிரியர் ஒருவர் தேங்கியிருந்த மழைநீரில் நடந்து செல்ல விருப்பமில்லாமல் புத்திசாலித்தனமாக திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதாவது பள்ளி மாணவர்களை அழைத்து மழைநீர் தேங்கியுள்ள இடத்தில் பள்ளியில் உள்ள பிளாஸ்டிக் நாற்காலிகளை போடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவர்களும் ஆசிரியர் சொல்வதை தட்ட முடியாது என்பதால் அந்த நாற்காலிகளை அந்த மழைநீரில் கொண்டு வந்து போட்டுள்ளனர். இதனையடுத்து  அந்த நாற்காலிகள் மீது ஏறிய ஆசிரியை நாற்காளிகள் சரிந்து விடக் கூடாது என்பதற்காக பள்ளி மாணவர்களை அந்த நாற்காளிகளை பிடித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.  அந்த மாணவர்களும் ஆசிரியை நடந்து செல்ல ஏதுவாக நாற்காளிகளை பிடித்துக்கொண்ட நிலையில், அந்த ஆசிரியர் தேங்கிய மழைநீர் தனது காலில் படாதவாறு நாற்காலிகள் மீது ஏறி பள்ளிக்குள் நுழைந்தார்.  


இதனை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், இந்த வீடியோ வைரலானது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய அம்மாநில பள்ளிக்கல்வித்துறை, அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.